தினமலர் 28.06.2010
தமிழ் பெயர் பலகை வைக்க ஜூலை 10வரை அவகாசம்
திருச்செங்கோடு: “வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும்‘ என, திருச்செங்கோடு நகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்திய தமிழக அரசு, தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.அதன்படி, திருச்செங்கோடு நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களும் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும். வரும் ஜூலை 10ம் தேதிக்குள் நகரில் உள்ள அனைத்து பெயர் பலகையிலும் தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும். தமிழில் பெயர்ப்பலகை வைக்காமல் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் பெயர்களை எழுதி வைத்திருந்தால், அவை அகற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.