தினமலர் 02.09.2010
ரூ.10 கோடியில் சாலைகள் புதுப்பிப்பு : குடந்தை நகர்மன்ற கூட்டத்தில் முடிவு
கும்பகோணம்: கும்பகோணம் நகரில் 10 கோடி ரூபாய் செலவில் சாலைகளை புதுப்பிக்க நகர்மன்ற கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
கும்பகோணம் நகராட்சியின் அவரச கூட்டம் தலைவர் தமிழழகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், ஆணையர் பூங்கொடி அருமைக்கண், துணைத் தலைவர் தர்மபாலன், பொறியாளர் கனகசுப்புரெத்தினம், மேலாளர் லெட்சுமிநாராயணன் மற்றும் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் மாநில நிதி ஒதுக்கீட்டில் நிதி வழங்கிட ஏதுவாக நகராட்சி நிர்வாக இயக்குநரகம் கேட்டுகொண்டதன் பேரில், கோவில், முக்கிய புராதன சின்னம், பள்ளி, தொழிற்கூடம், போக்குவரத்துக்கான முக்கிய சாலை ஆகிய இனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அவ்வகையில் பாதாள சாக்கடை, குடிநீர் விநியோகம் குழாய் அமைத்தல், மழை மற்றும் இடர்பாடுகள் ஆகிய இனங்களால் பாதிப்பான கும்பகோணம் நகராட்சி பகுதியில் 50 கிலோ மீட்டர் நீளத்துக்கு 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணி மேற்கொள்ள கருத்துருவை நகராட்சி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைத்து நிதி பெறுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், திமுக உறுப்பினர் காமேஷ் பேசுகையில், “பாதாள சாக்கடைத் திட்டப்பணி எனது வார்டில் மேற்கொள்ளவில்லை. ஒரு சில தெருக்களில் சாலைகளும் சரியில்லை‘ என்றார்.
இதற்கு பதிலளித்த பொறியாளர், “நடப்பு நிதியாண்டில் விடுபட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும்‘ என்றார்.
பாமக உறுப்பினர் பீட்டர் லாரன்ஸ் பேசுகையில், “25 வார்டு பகுதியில் ராதா நகர், கிருஷ்ணப்பா மேலசந்து சாலையை இத்திட்டத்தில் சேர்க்கவில்லை‘ என்றார்.
பொறியாளர்: “தாங்கள் குறிப்பிட்ட நகர் நகராட்சிப் பகுதியில் உள்ளதா? என ஆய்வு செய்த பின் இத்திட்டம் இறுதி வடிவம் பெறும்போது சேர்த்துகொள்ளப்படும்‘ என்றார். இவ்வாறு விவாதம் முடிந்த பின் அவசர கூட்டம் நிறைவடைந்தது.