தினமணி 02.12.2011
10 நாட்களுக்குள் சாலைகள் சீரமைக்கப்படும்: சென்னை மாநகராட்சி
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகரில் கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவ மழையாலும், சேவைத் துறைகளால் மேற்கொள்ளப்பட்ட சாலை வெட்டுப் பணிகளாலும், பெரும்பாலான சாலைகள் குண்டும்,குழியுமாக சாலைகள் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி ஆணையாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார் மண்டல அலுவலர்கள் மற்றும் அனைத்து துறைத்தலைவர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டத்தில் ஆணையர் தெரிவிக்கும்போது, சேதமடைந்துள்ள சாலைகளை சீர்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகமானது பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசின் நிதிஉதவியுடன் விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளில் மழையின் காரணமாக சேதடைந்துள்ள சாலைகளில் ஏற்பட்டுள்ள உள்ள குழிகளில் கட்டட இடிபாடுகள், செங்கற்கள், மூலம் செப்பனிட்டு சாலைகளை போக்குவரத்து வசதி முழு அளவில் ஏற்படுத்தும் பொருட்டு, 10 நாட்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என்றார்.
பேருந்து சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து, இக்குறைகளை போக்க வேண்டும். மேலும், புதிதாக சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள 15 மண்டல பகுதிகளில் உள்ள சாலைகளை சரி செய்ய ஒவ்வொரு மண்டலத்திற்கும் 2 லாரிகள், 2 ஜே.சி.பி. இயந்திரம், 1 ரோடு ரோலர் மற்றும் ஒரு வார்டுக்கு 10 பணியாளர்களைக் கொண்டு போர்க்கால அடிப்படையில் இரவு, பகல் பாராமல் இப்பணியினை விரைந்து முடிக்க ஆணையிட்டார்.
இக்கூட்டத்தில், அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.