குப்பைத் தொட்டிகள் வாங்க மாநகராட்சிக்கு ரூ.10 கோடி
சென்னை மாநகராட்சிக்கு ரூ.10 கோடி செலவில் 750 குப்பை சேகரிக்கும்
தொட்டிகள் வாங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி
தெரிவித்தார்.
பேரவையில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட
அறிவிப்புகள்: சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளில் உள்ள உட்புறச்
சாலைகளில் சேகரிக்கப்படும் திடக் கழிவுகளை அகற்றுவதற்கு 6 கன மீட்டர்
கொள்ளளவு கொண்ட இலகு ரக 50 காம்பேக்டர்களும், குப்பைகளைச் சேகரிக்க 1,100
லிட்டர் கொள்ளளவு கொண்ட 750 காம்பேக்டர் தொட்டிகளும் ரூ.10 கோடி செலவில்
வாங்கப்படும். இதன் மூலம் நாள்தோறும் 500 மெட்ரிக் டன் திடக் கழிவுகள்
அகற்றப்படும்.
குடிநீர் கண்காணிப்பு கருவிகள் வாங்க ரூ.1.80 கோடி:
குடிநீரில் உள்ள குளோரின் அளவு, கலங்கல் தன்மை ஆகியவற்றை துல்லியமாகவும்,
தொடர்ச்சியாகவும் ஜி.எஸ்.எம்., ஜி.பி.ஆர்.எஸ். முறைப்படி கண்காணிக்கும்
கருவிகள் ரூ. 1.80 கோடி செலவில் சென்னை மாநகரில் 50 இடங்களில்
பொருத்தப்படும்.
தானியங்கி முறையை அமைக்க ரூ.3.60 கோடி: கழிவு
நீரகற்று நிலையங்களின் செயல்திறனை மேம்படுத்தவும், தொலை தூரத்தில் இருந்து
இந்த இயந்திரங்களை இயக்கவும் சென்னைக் குடிநீர் வாரியத்தின்
கட்டுப்பாட்டில் உள்ள 218 கழிவு நீரகற்று நிலையங்களில் ரூ.3.60 கோடி
செலவில் தானியங்கி முறை அமைக்கப்படும் என்றார் அமைச்சர் முனுசாமி.