திருப்பூர் மாநகரில் 10 இடங்களில் மலிவுவிலை உணவகம் திறப்பு
தமிழக அரசால் அறிவிக்கபட்ட மலிவு விலை உணவகங்கள் திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் நேற்று 10 இடங்களில் திறக்கப்பட்டன.
சென்னையில் மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்ததையடுத்து, தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் மலிவுவிலை உணவகம் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி, திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் 10 இடங்களில் மலிவுவிலை உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. டவுன்ஹால் பகுதி குமரன் வணிக வளாகம், பழைய பேருந்து நிலையம், கொங்கு பிரதான சாலை சின்னசாமியம்மாள் பள்ளி அருகில், முதலாவது மண்டல அலுவலக வளாகம்(15 வேலம்பாளையைம்), 15 வேலம்பாளையம் பழைய நகராட்சி அலுவலக வளாகம், ஆத்துப்பாளையம், பாண்டியன் நகர், சந்திராபுரம், 4 ஆவது மண்டல அலுவலகம்(நல்லூர்), தென்னம்பாளையம் என 10 இடங்களில் தலா ரூ.25 லட்சம் செலவில் மலிவுவிலை உணவகத்திற்கு புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஜெயலலிதா மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் உணவகத்தை திறந்து வைத்தார்.
அதையடுத்து, திருப்பூரில் குமரன் வணிகவளாக அம்மா உணவகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பெயர் பலகையை திறந்து வைத்து, மலிவு விலை உணவு விநியோகத்தை தொடங்கி வைத்தார். ஆட்சியர் கோவிந்தராஜ், மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் செல்வராஜ், மாநகரப் பொறியாளர் எம்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்காக திருப்பூர் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.2.75 கோடி கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.