ஈரோடு மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
ஈரோடு மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
அம்மா உணவகம்
தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் ஏழை–எளிய பொதுமக்கள், கூலித்தொழிலாளர்கள் குறைந்த விலையில் தரமான உணவு சாப்பிடும் வகையில் அம்மா உணவகங்களை திறக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட ஆர்.என்.புதூர், பி.பி.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், வ.உ.சி. பூங்கா, சூளை, நாச்சியப்பா வீதி, சூரம்பட்டி, கொல்லம்பாளையம், மரப்பாலம், காந்திஜி ரோடு ஆகிய 10 இடங்களில் புதிதாக அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டன. இதையடுத்து ஈரோடு மாநகராட்சியில் அமைக்கப்பட்ட அம்மா உணவகங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது.
முதல்–அமைச்சர் தொடங்கி வைத்தார்
இதனைத்தொடர்ந்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்தவாறே வீடியோ கான்பரன்சிங் மூலம் ஈரோடு ஆர்.என்.புதூரில் அம்மா உணவகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து ஆர்.என்.புதூர் அம்மா உணவகத்தில் உணவு விற்பனையை ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாநகராட்சி ஆணையாளர் மு.விஜயலட்சுமி, மாநகராட்சி என்ஜினீயர் ஆறுமுகம், நகர் நல அதிகாரி டாக்டர் அருணா, 1–வது மண்டல மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகவடிவு, அரசு வக்கீல் துரைசக்திவேல் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முதல் நாள் விற்பனை என்பதால் ஆர்.என்.புதூர் உள்பட அனைத்து உணவகங்களிலும் சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் இனிப்புகளும் வழங்கப்பட்டன.
இதேபோல் ஈரோடு மாநகராட்சியில் அமைக்கப்பட்ட மீதம் உள்ள அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. அம்மா உணவகத்தில் இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் ரூ.5–க்கும், தயிர் சாதம் ரூ.3–க்கும் விற்பனை செய்யப்படுகிறது.