10 இடங்களில் ‘அம்மா’ உணவகம் திறக்கப்பட்டது முதல் நாளில் இலவசமாக உணவு விநியோகம்
மதுரை மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் ‘அம்மா’ உணவகம் திறக்கப்பட்டது. முதல்நாளான நேற்று அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
‘அம்மா’ உணவகம்
ஏழைகள் பயன்பெறும் வகையில் சென்னையில் ‘அம்மா’ உணவகம் திறக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி உள்பட தமிழகத்தில் உள்ள 9 மாநகராட்சிகளிலும் ‘அம்மா’ உணவகம் நேற்று திறக்கப்பட்டது.
மதுரை நகரில் ஆரப்பாளையம், ஆனையூர், புதூர், காந்திபுரம், ராம்வர்மா நகர், ராமராயர் மண்டபம், சி.எம்.ஆர்.ரோடு, பெரியார் பஸ் நிலையம், திருப்பரங்குன்றம், பழங்காநந்தம் பஸ்நிலையம் ஆகிய 10 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உணவகங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து வீடியோ கான்பரசிங் மூலம் திறந்து வைத்தார்.
உணவகம் திறந்து வைக்கப்பட்டதும் உணவு வழங்கப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி சாப்பிட்டனர். திறப்பு விழாவின் முதல்நாள் என்பதால் நேற்று அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
முதல்–அமைச்சருக்கு நன்றி
பெரியார் பஸ் நிலையம் மேலவாசலில் அமைக்கப்பட்டு உள்ள ‘அம்மா’ உணவகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு மேயர் ராஜன் செல்லப்பா முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
அவர் பேசும் போது, ’கோவில் நகரமான மதுரையை வன்முறையாளர்களிடம் இருந்து மீட்டெடுத்த முதல்–அமைச்சர், மதுரைக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தற்போது ஏழை, ஏளிய மக்களின் ஆகியோரின் பசியை போக்க ‘அம்மா’ உணவகங்களை திறந்து வைத்திருக்கிறார். இதற்காக மதுரை மக்களின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்’ என்றார்.
பெண் உருக்கம்
அங்கு வந்திருந்த பயனாளி பாண்டியம்மாள் கூறுகையில், ‘‘பூ வியாபாரம் செய்து வருகிறேன். காலையில் சில நேரம் சமையல் செய்ய நேரம் இருக்காது. அப்போது எனது குழந்தைகள் பட்டினியாகத் தான் பள்ளிக்கு செல்வார்கள். தற்போது ‘அம்மா’ உணவகம் இங்கு திறக்கப்பட்டு உள்ளது. இங்கு ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தருகிறார்கள். எனது குழந்தைகள் இங்கு சாப்பிட்டு விட்டு மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு செல்வார்கள். என்னை போல பல குடும்பங்கள் இந்த உணவகத்தின் மூலம் பயன்பெறும். எனவே முதல்–அமைச்சருக்கு நன்றி’’ என்றார்.
நன்றிக்கடன்
தொடர்ந்து அம்மா உணவகத்தில் பணியாற்றும் செல்வி என்ற பெண் பேசும் போது, ‘‘அம்மா உணவகத்தில் பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. ஒரு உணவகத்தில் 15 பெண்கள் பணியாற்றுகிறோம். மொத்தமுள்ள 10 உணவகத்தில் 150 பேர் பணியாற்றுகிறோம். இந்த 150 குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றிய முதல்–அமைச்சரை உயிர் உள்ளவரை மறக்க மாட்டோம். என்றைக்கும் நன்றி கடன்பட்டிருக்கிறோம். இந்த திட்டம் சிறப்பாக நடைபெற எங்களை அர்ப்பணித்து பணியாற்றுவோம்’’ என்றார்.
திருப்பரங்குன்றம்
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால், நகர் பொறியாளர் (பொறுப்பு) மதுரம், நகர் நல அலுவலர் யசோதாமணி, உதவி நகர்நல அலுவலர் பிரியாராஜ், உதவி கமிஷனர் தேவதாஸ், தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.