தினமணி 4.11.2009
அந்தியூர் பகுதிக்கு ரூ. 10 கோடியில் குடிநீர் திட்டம்
பவானி, நவ. 3: அந்தியூர் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் ரூ. 10 கோடி மதிப்பில் காவிரி ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உள்ளாட்சி தின விழா தலைவர் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலர் பழனிச்சாமி வரவேற்றார். அந்தியூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.குருசாமி சிறப்புறையாற்றினார்.
விழாவை முன்னிட்டு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு உள்ளாட்சி நிர்வாகம் குறித்த கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், அந்தியூர் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் காவிரி ஆற்றிலிருந்து ரூ. 10 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான திட்ட வரைவுகள் தயார் செய்யப்பட்டு அரசின் பார்வைக்கு அனுப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் அந்தியூர் தொகுதி மக்களின் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என விழாவில் தெரிவிக்கப்பட்டது.