தினமணி 23.08.2013
தினமணி 23.08.2013
ரூ.10 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு
செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயில்
பகுதியில், ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றி, ரூ.10 கோடி மதிப்புள்ள கோயில்
நிலத்தை புதன்கிழமை அதிகாரிகள் மீட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோயில்
பகுதியில், பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு
சொந்தமாக நரசிம்ம வர்மநகரில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து 20
குடிசைகள் வரை அமைத்திருந்தனர்.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் வீரபொம்மு, காஞ்சிபுரம் மாவட்ட உதவி
ஆணையர், மறைமலைநகர் காவல் நிலையத்துக்கும், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ.
உள்ளிட்ட வருவாய்த்துறைக்கும் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உதவி ஆணையர் மோகனசுந்தரம் உத்தரவின்பேரில் கோயில் செயல்
அலுவலர் வீரபொம்மு, கிராம வருவாய் அலுவலர் மோகன், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர்
ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அப்பகுதிக்குச் சென்று பொக்லைன் இயந்திரம் மூலம்
ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றி நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின்
மதிப்பு சுமார் ரூ.10 கோடி ஆகும்.
கோயில் செயல் அலுவலர் வீரபொம்மு கூறுகையில், “இதேபோல் ஆக்கிரமிப்பில்
சிக்கியுள்ள கோயில் நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும்’ என்றார்.