தினமணி 10.11.2009
வெள்ள நீர் வடிகால் பணி 10 தினங்களில் நிறைவடையும்
விழுப்புரம், நவ. 9: விழுப்புரத்தில் நடைபெறும் வெள்ள நீர் வடிகால் பணிகள் இன்னும் 10 தினங்களுக்குள் முடிவடையும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
தற்போது பெய்த மழையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. அந்த மழை நீரை வெளியேற்றும் பணிக்காக ரூ.1.55 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப் பணிகளை பார்வையிட்டு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறியது:
“”கடந்த ஆண்டு மழை வெள்ளம் ஏற்பட்டபோது இருந்த தண்ணீர் இப்போது பஸ் நிலையத்தில் இல்லை. மேலும் குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வருகின்றன. 100 குதிரை திறன் கொண்ட மின்மோட்டார் பொறுத்தும் பணி மட்டும் நிலுவையில் உள்ளது.
தற்போது மழை நீரை வெளியேற்ற வடிகால்கள் அமைக்கப்படும். இன்னும் 10 தினங்களில் மின்மோட்டார் நிறுவப்பட்டு, அனைத்து பணிகளும் முடிக்கப்படும். இதனால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வெள்ள நீர் தேங்குவதற்கு வாய்ப்பே இல்லை” என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:
“”விழுப்புரத்தில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துவிட்டது. குறிப்பாக நகராட்சி பகுதியில் 86 கி.மீ. நீளத்துக்கு 70 கி.மீ. நீளம் பாதாளச் சாக்கடை பணிகள் முடிவடைந்துவிட்டன. இரு மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். அதன் பிறகு அனைத்து சாலைகளும் சிமென்ட் சாலைகளாக மாற்றப்படும்” என்றார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி, நகர் மன்றத் தலைவர் ஆர்.ஜனகராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அமல்ராஜ், நகராட்சி ஆணையர் ஏ.கே.சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.