தினமலர் 07.04.2017
கோயம்பேட்டில் 10 கடைகளுக்கு ‘சீல்’ சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அதிரடி
கோயம்பேடு: கோயம்பேடு மார்க்கெட்டில், பராமரிப்பு வரி
கட்டாத மற்றும் அனுமதி பெறாத, 10 கடைகளுக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள்,
‘சீல்’ வைத்தனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில், 3,000க்கும்
மேற்பட்ட பூ, பழம், காய்கறி மொத்த விற்பனை கடைகள், சில்லரை விற்பனை கடைகள்
உள்ளன. மார்க்கெட் பராமரிப்பு மற்றும் நிர்வாக பணியை, சென்னை பெருநகர்
வளர்ச்சி குழுமத்தில் இயங்கும், மார்க்கெட் நிர்வாக குழு கவனிக்கிறது.
இங்கு
கடைகள் அமைக்க, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., அனுமதி
பெற வேண்டும். அனுமதி பெறுவோருக்கு, சான்றிதழ் வழங்கப்படும். மேலும்,
மாதம்தோறும், சதுரடிக்கு ஒரு ரூபாய் என, பராமரிப்பு தொகையும் வழங்க
வேண்டும்.
இந்நிலையில், அங்கு, விதியை மீறி, நடைபாதைகளை
ஆக்கிரமித்து, பலர் கடை நடத்துகின்றனர். இதுகுறித்த புகார்களை அடுத்து,
ஆக்கிரமிப்பு கடைகளை, அதிகாரிகள் அகற்றி
வருகின்றனர்.
சி.எம்.டி.ஏ.,
சார்பில் அனுமதி பெறாமலும், உரிமத்தை புதுப்பிக்காமல், பராமரிப்பு வரி
கட்டாமலும் உள்ள, 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள்,
நேற்று, ‘சீல்’ வைத்தனர்.
400 கடைகள்
கடந்த,
2013ல் இருந்து, பராமரிப்பு வரி வழங்காத மற்றும் உரிமத்தை புதுப்பிக்காத
கடைகளுக்கு, ‘சீல்’ வைத்துள்ளோம். இன்னும், 400க்கும் மேற்பட்ட கடைகள்,
உரிமம் பெறாமல் உள்ளன. விரைவில் அவற்றுக்கும், ‘சீல்’ வைக்கப்படும்.