தினமலர் 29.06.2010
மோகனூரில் 10 ஆண்டுக்கு முன் “தமிழ் வாழ்க‘ நியான் விளக்கு
மோகனூர்: மோகனூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் பத்து ஆண்டுக்கு முன்பே, “தமிழ் வாழ்க‘ என்ற நியான் விளக்கு அமைத்து சாதனை படைத்துள்ளது. கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அலுவலகங்களிலும் “தமிழ் வாழ்க‘ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட நியான் விளக்கு அமைக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கான அறிவிப்பு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வெளியிடப்பட்டது. இந்த மின்னொளி பலகை 12 அடி அகலம், 3 அடி உயரம் அளவுக்கு குறையால் இருக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து “தமிழ் வாழ்க‘ என்ற நியான் விளக்கு பலகை அமைக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பே “தமிழ் வாழ்க‘ என்ற நியான் விளக்கு பலகையை, சென்னை ரிப்பன் கட்டிடத்துக்கு அடுத்து மோகனூரில் அமைத்து டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சாதனை படைத்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி “தமிழ் வாழ்க‘ நியான் விளக்கு துவக்க விழா, மோகனூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது. அப்போதைய பஞ்சாயத்து சேர்மன் உடையவர் தலைமையில் நடந்த விழாவில், தமிழ் வளர்ச்சி கழக முன்னாள் இயக்குனர் சிலம்பொலி செல்லப்பன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வீரப்பன், வேலுசாமி, சேலம் டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் மோகன், செயல் அலுவலர் ருக்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு அரசு அறிவித்த இத்திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே மோகனூரில் அமைத்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளனர் இந்த உள்ளாட்சி நிர்வாகத்தினர். இது குறித்து முன்னாள் சேர்மன் உடையவர் கூறியதாவது: ஒவ்வொரு முறையும் சென்னை செல்லும்போது மாநகராட்சி அலுவலக கட்டிடமான ரிப்பன் கட்டிடம் மீது “தமிழ் வாழ்க‘ பெயர் பலகை ஒளிர்வதை கண்டு பெருமைபடுவோம். அதேபோல் மோகனூரில் அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கவுன்சில் கூட்டத்தில் அனைவரின் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, “தமிழ் வாழ்க‘ என்ற நியான் விளக்கு அமைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.