தினமணி 15.03.2010
திருவண்ணாமலை நகரில் 100 குரங்குகள் பிடிபட்டன
திருவண்ணாமலை, மார்ச்14: திருவண்ணாமலை நகரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்த 100 குரங்குகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்துள்ளனர் (படம்).
திருவண்ணாமலை நகரம் ஆன்மிக நகராக விளங்குகிறது. அருகே மலை உள்ளதால் நகரம் முழுவதும் ஏராளமான குரங்குகள் சுற்றி வருகின்றன. பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் குரங்குகளால் பெரும் இன்னல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குரங்குகளைப் பிடிக்க நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், துணைத் தலைவர் ஆர்.செல்வம், ஆணையர் சேகர் ஆகியோர் முயற்சி மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக நகராட்சி, வனத்துறை அதிகாரிகள், கால்நடை பராமரிப்புத் துறை, விலங்குகள் வதை தடுப்புச் சங்கத்தினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அதில் குரங்குகளை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதிகளில் விட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப்பாதை, காந்திநகர், உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் திரிந்த 100 குரங்குகள் பிடிக்கப்பட்டன. அவை அனைத்தையும் வனப்பகுதியில் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன