தினமலர் 11.06.2010
100 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்
ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு அவிநாசியில் ரோடு விரிவடைகிறது அவிநாசியில் நூறு ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பில் இருந்த கட்டடங்களை வருவாய்த் துறையினர் நேற்று அதிரடியாக அகற்றினார். இதன் மூலம் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், அவிநாசி வழியே தேசிய நெடுஞ்சாலை எண்: 47 செல்கிறது. இந்த ரோடு வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. நெரிசலை தவிர்க்க போலீசார் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் இருந்தனர்.
இருப்பினும், அதற்கு பாதியளவு பலன் மட்டுமே கிடைத்தது.கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், அவிநாசி வழியே செல்லக்கூடும் என்பதை கணித்த போலீசார், தற்போதுள்ள ரோட்டை அகலப்படுத்த கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.கலெக்டர் சமயமூர்த்தி, சம்பந்தப்பட்ட திகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலை ஒட்டியுள்ள, வருவாய்த்துறைக்கு சொந்தமான க.ச., எண்: 85பி/2ல் உள்ள கட்டடங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இப்பணியில் முதல்கட்டமாக, தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருந்த அய்யப்பன், எல்லை மாகாளியம்மன், சமயபுரம் மாரியம்மன், வெள்ளை விநாயகர் உள்ளிட்ட ஏழு கோவில்களை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், கடந்த மாதம் 14ம் தேதி இடித்தனர். இதில் கிடைத்த இடத்தை கொண்டு, கருணாம்பிகா தியேட்டர் முதல் அய்யப்பன் கோவில் இருந்த இடம் வரை ரோட்டின் மையத்தில் டிவைடர்களை போக்குவரத்து போலீசார் வைத்தனர்.இதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு நல்ல தீர்வு காணப்பட்டது. இதற்கிடையே, க.ச., எண்: 85பி/2ல் உள்ள கட்டடங்களை, குடியிருப்புகளை 7ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டுமென்ற படிவம்-6 நோட்டீஸ் சம்பந்தப்பட்டவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு எல்லையில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் சுற்றுச்சுவர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு இடிக்கப்பட்டது. கடை வீதி கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட கெடு முடிந்த பின்பும், கூடுதலாக இரு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அவகாசம் முடிவுற்ற நிலையில், நேற்று காலை 8.00 மணி முதல் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கும் பணி துவங்கியது.பெரிய தேர் நிலையத்துக்கு மேற்குப்புறத்தில் துவங்கிய இப்பணி தொடர்ந்து நீடித்தது. இடிப்பு பணியில் 10 பொக்லைன் இயந்திரங்கள், ஐந்து லாரிகள் பயன்படுத்தப்பட்டன. திருப்பூர் ஆர்.டி.ஓ., சொக்கன் தலைமையில், தாசில்தார் சென்னியப்பன், வருவாய் ஆய்வாளர்கள் பழனிசாமி, ஆறுமுகம், சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் சிவாஜி, ரங்கசாமி, பாலு உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கண்காணித்தனர்.ஏ.டி.எஸ்.பி., சுந்தரவடிவேல் தலைமையில், டி.எஸ்.பி.,க்கள் காமராஜ் (அவிநாசி), ராமலிங்கம் (பல்லடம்), முருகானந்தம் (உடுமலை), 10 இன்ஸ்பெக்டர்கள், 29 எஸ்.ஐ.,க்கள், 95 போலீசார், 50 சிறப்பு போலீசார் என 188 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அவிநாசி கோட்ட உதவி செயற்பொறியாளர் மாதேஸ்வரன், மின்வாரிய கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, செயல் அலுவலர்கள் வெற்றிச்செல்வன் (கோவில்), கதிரவமூர்த்தி (பேரூராட்சி) உட்பட அந்தந்த துறையினரும் ஆக்கிரமிப்பு பணிகளை ஆய்வு செய்தனர். கட்டடங்களை இடிக்கும் பணிக்கு வசதியாக, மெயின் ரோடு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. வாகனங்கள், ராயம்பாளையம், ராயன் கோவில் வழியாக திருப்பி விடப்பட்டன. இடிக்கும் பகுதிகளை பார்க்க பொதுமக்கள் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
விடிய விடிய “காலி‘ செய்த உரிமையாளர்கள்: அவிநாசி கடை வீதியில் <உள்ள கட்டடங்களை இடிப்பது உறுதியான நிலையிலும், பொதுமக்கள் தரப்பில் பல்வேறு யூகங்கள் எழுந்தன. “15 அடிக்கு மட்டுமே இடிக்கின்றனர்; குடியிருப்புகளை இடிப்பதில்லை; அனைவரும் “ஸ்டே‘ வாங்கியுள்ளதால், இடிக்க மாட்டார்கள்,’ என்ற பல தகவல்கள் பரவின. இதனால், கட்டட, குடியிருப்பு உரிமையாளர்கள் குழப்பம் அடைந்ததால், நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு வருவாய்த்துறையினர் ஒலி பெருக்கி மூலம் “தண்டோரா‘ போட்டனர். இதன் பிறகே, கடைகள் முழு வீச்சில் காலியாயின. நேற்று முன்தினம் மாலை துவங்கிய, கடைகளை காலி செய்யும் பணி, நேற்று காலை 6.00 மணி வரை தொடர்ந்தது.
விடிய விடிய கடை உரிமையாளர்கள், ஆட்களை நியமித்துக் கொண்டு, தங்களது உடைமைகளை சரக்கு ஆட்டோ மூலம் கொண்டு சென்றனர். ரூ.100 கோடி நிலம் மீட்பு: அவிநாசி கடை வீதி க.ச., எண்: 85பி/2ல் இருந்த கட்டடங்கள் நேற்று அகற்றப்பட்டன. உயர் நீதிமன்றத்தில் ஐந்து பேர் இடைக்கால தடை பெற்றதால், அக்கட்டடங்களை தவிர, பிற கட்டடங்கள் இடிக்கப்பட்டன. “அவிநாசி வரலாற்றில் 100 ஆண்டு காலமாக இருந்த கட்டடங்கள், வீடுகள் மீட்கப்பட்டதன் மூலம், தற்போதைய மார்க்கெட் மதிப்புப்படி ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளதாக,’ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இடத்தை மீட்க 1993ம் ஆண்டில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது தான் வெற்றி கிடைத்துள்ளது என்று வருவாய்த்துறையினர் கூறினர். ரூ.100 கோடி நிலம் மீட்கப்பட்டாலும் கூட, அந்த இடத்தை கம்பி வேலி அமைத்து<, உரிய துறை வசம் ஒப்படைத்து பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
– நமது நிருபர் –