தினமணி 22.07.2010
மதுரை மாநகராட்சிக்கு ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்க அரசுக்கு கோரிக்கைமதுரை, ஜூலை 21: மதுரை மாநகராட்சியில் நிலவும் நிதிப் பற்றாக்குறையைப் போக்கவும், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளவும் தமிழக அரசிடம் ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய, மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறையால் திணறும் மதுரை மாநகராட்சி என்ற செய்தி தினமணியில் ஜூலை 12-ல் வெளியானது. இதன் எதிரொலியாக, வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசுக்கு மதுரை மாநகராட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும், மேயர் கோ.தேன்மொழி தலைமையிலான கவுன்சிலர் மற்றும் அதிகாரிகள் குழுவினர், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை விரைவில் சந்திக்கவுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது: பல்வேறு இனங்களில் கோடிக்கணக்கான ரூபாய் அளவில் வரிகள் நிலுவையில் உள்ளது. மாநகராட்சிக்கு கிடைக்கும் வருவாய் மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சம்பளம் மட்டுமே மாதம் ரூ.6 கோடி வரை கொடுக்க வேண்டியுள்ளது.
எனவே, முதல்வர் மற்றும் துணை முதல்வரை நேரில் சந்தித்து மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதி கோர, மேயர் தலைமையிலான குழுவினர் விரைவில் சென்னை செல்லவுள்ளோம். இதற்கான தேதி விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம்.
மேலும், மாநகராட்சிக்கு உள்பட்ட பல இடங்களில் குறிப்பாக கோச்சடை லாரி புக்கிங் ஷெட்டில் 200 கடைகள் கட்டி வாடகைக்கு விடுவது, மீனாட்சி கோயில் பகுதியில் சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடத்தில் நவீன பார்க்கிங் அமைப்பது உள்ளிட்டபல்வேறு திட்டங்கள் மூலமும் வருவாயைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.