தினமணி 09.11.2010
மெரினாவில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ 100 அபராதம்

சென்னை, நவ.9: மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ 100 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மெரினா கடற்கரையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். சென்னை மாநகராட்சி மூலம் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல்வேறு நவீன இயந்திரங்கள் மூலம் மெரினா கடற்கரை, புல்வெளிகள் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகம் எதிரில் ராஜாஜி சாலையில் புதிய பூங்காவினை ரூ.10 கோடி செலவில் திறந்து வைத்தார். சென்னை மாநகரின் சுற்றுலாப் பகுதியாக விளங்கும் மெரினா கடற்கரை ரூ. 26 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு மிக்க மெரினா கடற்கரையை பராமரிப்பதற்காக தூய்மைப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், தோட்டப் பணியாளர்கள், மின் பணியாளர்கள், தனியார் பாதுகாவலர்கள் என 149 பேர்கள் நாள்தோறும் பணியாற்றி வருகிறார்கள். இப்பணிக்காக சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு இளநிலை பொறியாளர் பணியமர்த்தப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
மெரினா கடற்கரை மேம்படுத்தும் பணி ரூ ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்படும்.
பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களை மெரினா கடற்கரையில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சென்னை மாநகராட்சி ரூ. 100 அபராதம் விதித்து, கட்டணம் வசூலிக்கும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என சென்னை மாநகராட்சி பல்வேறு விளம்பரங்களை மெரினா கடற்கரையில் செய்துள்ளது. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.