நாமக்கல் நகராட்சிக்கு ரூ.100 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்
விரிவுபடுத்தப்பட்ட நாமக்கல் நகராட்சிப் பகுதி மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் வகையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஏற்றார்போல, ரூ.100 கோடி மதிப்பில் புதிய குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த நாமக்கல் நகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, நாமக்கல் நகராட்சியுடன் அருகிலுள்ள 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 29 வார்டுகளாக இருந்த நாமக்கல் நகராட்சி, 39 வார்டுகளாக விரிவடைந்தது. நகராட்சி மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய ஏற்கெனவே மூன்று குடிநீர்த் திட்டங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் நாளொன்றுக்கு 80 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது நகராட்சி விரிவுபடுத்தப்பட்டதால் குடிநீருக்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நாமக்கல் நகராட்சியில் 39 எம்எல்டி (தினசரி 3.90 கோடி லிட்டர்) குடிநீர் விநியோகிக்கும் 4-ஆவது திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்காக ஜேடர்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் எடுத்து வரப்பட்டு கபிலர்குறிச்சி பகுதியில் சுத்திகரிப்பு செய்து நாமக்கல் நகராட்சிப் பகுதியில் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கபிலர்குறிச்சிப் பகுதியில் 8 ஏக்கர் நிலம் வாங்கவும் நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய குடிநீர் திட்டம் அமையப் பெற்றாமல், விரிவுபடுத்தப்பட்ட நகராட்சிப் பகுதிக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு எந்தவிதத் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க முடியும் என்கிறார் நகராட்சித் தலைவர் ஆர்.கரிகாலன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
நாமக்கல் நகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 1.20 லட்சமாகும். இந்த மக்களுக்கு தலா நாளொன்றுக்கு 35 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கு தற்போதுள்ள 3 குடிநீர் திட்டங்களும் போதுமானதாக இல்லாததால் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
விரைவில் புதிய குடிநீர்த் திட்டத்துக்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு நகர்மன்ற ஒப்புதலுடன் நகராட்சி நிர்வாக இயக்ககத்துக்கு அனுப்பப்படும் என்றார் நகராட்சி பொறியாளர் என்.கமலநாதன்.