மதுரை மாவட்டத்தில் முன்னோடியாகிறது: மேலூர் நகராட்சி பகுதியில் பாலிதீன் பைகளுக்கு ஒட்டு மொத்த தடை ரூ.100, 500 அபராதம் விதிப்பு
மதுரை மாவட்டத்தில் பாலிதீன் ஒழிப்பில் மேலூர் முன்னோடி நகராட்சியாக மாறியுள்ளது. பாலிதீன் பைகளை பயன்படுத்தும் கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிப்பதுடன், பொதுமக்களுக்கும் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது.
முன்னோடி நகராட்சி
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்பை ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தியது. வீடுவீடாக குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டு நகராட்சி ஊழியர்கள் மூலம் குப்பைகள் பெறப்பட்டன. தெருக்களில் குப்பை கொட்ட தடை விதிக்கப்பட்டது. இந்த திட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டதால், மேலூரில் தெருக்களில் குப்பை குவிவது தடுக்கப்பட்டது.
இதையடுத்து பாலிதீன் பைகள் பயன்பாட்டுக்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாமி எம்.எல்.ஏ. முயற்சியால் மேலூர் நகராட்சி பகுதியில் பாலிதீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு தமிழக அரசின் கெசட்டில் வெளியிடப்பட்டது.
பாலிதீன் பையில் டீ
இதற்கு முன்பு வரை மேலூரில் அனைத்து இடங்களிலும் பாலிதீன் பைகள் பயன்படுத்தப்பட்டன. சுடச்சுட டீயை கூட பாலிதீன் பைகளில் ஊற்றி கொடுத்து வந்தனர். பலசரக்கு கடைகள், காய்கறி என அனைத்து இடங்களிலும் பாலிதீன் ஆக்கிரமித்திருந்தது. கடைகளில் காகித பையில் பொட்டலம் போடுவதே மறந்தே போய்விட்டது.
இந்த நிலையில் பாலிதீன் ஒழிப்பை தீவிரப்படுத்த மேலூர் நகராட்சி முடிவு செய்தது. பாலிதீன் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி 4 தடவை விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. நகராட்சி தலைவர் சரவணன் தலைமையில் வீடுவீடாக சென்று பாலிதீன் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு விழிப்புணர்வு நோட்டீசுகள் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து தடை அமல்படுத்தப்பட்டது.
பயன்படுத்தினால் அபராதம்
கடந்த ஒருவாரமாக பாலிதீன் தடை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடைகளில் பாலிதீன் பைகள் கொடுத்தால் அவர்களுக்கு அதிகாரிகள் ரூ.500 அபராதம் விதிக்கின்றனர். பொதுமக்கள் பாலிதீன் பைகளில் பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றால், அவர்களை தடுத்து நிறுத்தி ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது.
தொடக்கத்தில் இந்த அபராதம் விதிக்கும் போக்கு, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது மக்களும் பாலிதீனை தவிர்க்க பழகிவிட்டனர். பொருட்கள் வாங்க, வீட்டில் இருந்து புறப்படும்போதே பைகளுடன் புறப்படுகின்றனர். காய்கறி கடைகளில் பாலிதீன் பைகள் இல்லை என்று அறிவிப்பு பலகையே வைத்துள்ளனர்.
இந்த நடவடிக்கை மேலூர் தொடர வேண்டும் என்றும், பிற நகராட்சிகளும் இதை பின்பற்ற வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.