தினமணி 6.11.2009
சாலைகளை மேம்படுத்த மாநகராட்சிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு
திருச்சி, நவ. 5: தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சாலைகளை மேம்படுத்த ரூ.100கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கு தமிழ்நாடு நகர்ப்புற உள் கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் டி.எச்.வி. இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாநகராட்சி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி பேசியது:
தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் மாநகராட்சிகளுடன், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கரூர், இனாம் கரூர், ஆலந்தூர் மற்றும் வளசரவாக்கம் போன்ற நகராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத் திட்டத்தில் திருச்சி மாநகராட்சிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகள், மழைநீர் வடிகால்கள், சிறுபாலங்கள், நடைபாதை மேம்பாலங்கள் போன்றவை மேம்படுத்தப்பட உள்ளன.
டி.எச்.நி. நிறுவனம் மூலம் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு, ஓராண்டுக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக நவம்பர் 10 ஆம் தேதி தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளது என்றார் ஆணையர்.
இக் கூட்டத்தில், நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகமது, செயற்பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாச்சலம், டி.எச்.வி. நிறுவனப் பொது மேலாளர் ஆர். ஜகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.