தினமணி 03.02.2010
பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றால் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் விரும்பும் இடத்துக்கு சுற்றுலா
திருவண்ணாமலை, பிப். 2: பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் நகராட்சி பள்ளி மாணவ, மாணவியரை அவர்கள் விரும்பும் இடத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வேன் என திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் கூறினார்.திருவண்ணாமலை நகராட்சியின் கீழ் மொத்தம் 21 நகராட்சி மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 8800 பேர் பயின்று வருகின்றனர். இவர்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.
இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியருக்கு ஒரு நாள் கல்விச் சுற்றுலா செல்ல தனது சொந்த நிதியில் இருந்து நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் ஏற்பாடு செய்துள்ளார்.
முதல்கட்டமாக திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முருகையன் நினைவு நகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவிகள் செவ்வாய்க்கிழமை சாத்தனூர் அணைக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். 10 பஸ்கள் மூலம் மாணவிகள், ஆசிரியர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சாத்தனூர் அணை மற்றும் பிக்அப் அணை, முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களுக்கு மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கேயே சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன்,துணைத் தலைவர் ஆர்.செல்வம், கவுன்சிலர்கார்த்திவேல்மாறன், ஆணையர் பி.சேகர், பொறியாளர் சந்திரன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் கூறியது:
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் தேர்வு எதிர்கொள்ளும் வகையில் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளோம். விரைவில் 1 வகுப்பு முதல் மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியரும் அழைத்துச் செல்லப்படுவர்.
பொதுத்தேர்வில் 100 சதவீதம் பெறும் நகராட்சி பள்ளி மாணவ, மாணவியரை அவர்கள் விரும்பும் இடத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வேன் என்றார்.