தினமணி 12.03.2010
100 சதவீத பிறப்பு 97.5 சதவீத இறப்பு
திருப்பூர், மார்ச் 11: கடந்த ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் 100 சதவீத பிறப்புகளும், 97.5 சதவீத இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
÷பிறப்பு இறப்பு பதிவு மற்றும் மகப்பேறு இறப்பு தணிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி தலைமையில் திருப்பூரில் புதன்கிழமை நடந்தது.
÷அனைத்து பிறப்பு– இறப்புகளும் 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்பது தமிழ்நாடு பிறப்பு– இறப்பு விதியின் கூறு. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2009ம் ஆண்டு 100 சதவீதம் பிறப்புகளும், 97.5 சதவீதம் இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டில் 100 சதவீதம் பிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
÷2005ம் ஆண்டு முதல் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலேயே குழந்தையின் பெயரையும் பதிவு செய்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே இலவச பிறப்பு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
÷கொலை மற்றும் விபத்து காரணமாக நடைபெறும் இறப்புகளை சம்பந்தப்பட்ட எல்லை காவல்நிலைய ஆய்வாளர்கள் மற்றும் பிறப்பு– இறப்பு பதிவாளரிடம் பதிவு செய்யவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ÷நிறைவில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் இதுநாள் வரை மகப்பேறு காரணமாக 3 இறப்புகள் நடந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகப்பேறு இறப் புகளை தவிர்க்க மருத்துவ அலுவலர்களுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
÷இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.வி.முரளிதரன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் வி.விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் சையது ஹுமாயூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.