தினகரன் 20.06.2013
மழைநீர் சேகரிப்பு வலியுறுத்தி 1000 மாணவ, மாணவிகள் பேரணி
: ஈரோடு மாநகராட்சி சார்பில் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் மழைநீர்
கட்டமைப்பு ஏற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
இதனை
மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட
கலெக்டர் சண்முகம் தலைமை வகித்தார். துணை மேயர் பழனிசாமி, கமிஷ்னர்
விஜயலட்சுமி, செயற்பொறியாளர் ஆறுமுகம், மண்டல தலைவர் மனோகரன், கேசவமூர்த்தி
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேரணியில் அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளி, ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, காமராஜர்
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மழைநீர் சேமிப்பை வலியுறுத்தும்
கட் அவுட், பேனர்களை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர். பேரணியில் மகளிர் சுய
உதவிக்குழுவினர், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பிரப்
ரோடு, எம்ஜிஆர்., சிலை, மேட்டூர் ரோடு வழியாக சென்று வஉசி., பூங்கா
மைதானத்தில் பேரணி நிறைவடைந்தது. பேரணியில் மழைநீர் சேமிப்புக்கான
கட்டமைப்பு அடங்கிய வாகனமும் இடம் பெற்றது.
பேரணி குறித்து மாநகராட்சி
மேயர் மல்லிகா பரமசிவம் கூறுகையில், ‘மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்
மழைநீர் சேமிப்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களிலும், ஏற்கனவே உள்ள அனைத்து அரசு
மற்றும் தனியார் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்
ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட
கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். ஏற்கனவே
வறட்சியால் கடும் பாதிப்புகள் ஏற்படுவதால் வரவிருக்கும் மழைகாலத்தின் போது
மழைநீரை சேமிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியே இந்த பேரணி நடத்தப்படுகிறது,
என்றார்.