தினமணி 06.12.2013
மாநகராட்சியில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்

மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி (இடமிருந்து 3-வது). உடன் மாநகராட்சி
ஆணையர் விக்ரம் கபூர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
செயலாளர் பணீந்தர ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். கோகுல இந்திரா,
வி.பி. கலைராஜன், துணை மேயர் பா. பெஞ்சமின், நிலைக்குழு உறுப்பினர்
(சுகாதாரம்) ஆ. பழனி உள்ளிட்டோர் உள்ளனர்.
சென்னை மாநகராட்சி நடத்தும் இலவச மருத்துவ
முகாம்கள் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த முகாம் மூலம் சுமார் 20 லட்சம்
பேர் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்
குறிப்பு: சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை, அரசு மற்றும் தனியார்
மருத்துவமனைகளுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம்களை அனைத்து வார்டுகளிலும்
நடத்துகிறது.
டிசம்பர் 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் டிச. 9-ஆம் தேதி வரை
நடைபெறும் இந்த முகாமை, மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை
தொடங்கி வைத்தார்.
செனாய் நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த
தொடக்க விழாவில் துணை மேயர் பா. பெஞ்சமின், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.
கோகுலஇந்திரா, வி.பி. கலைராஜன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்
வழங்கல் துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர்,
நிலைக்குழு தலைவர் (சுகாதாரம்) ஆ. பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு முகாம்களில் 160 மாநகராட்சி மருத்துவர்கள், 2,000 உதவி
மருத்துவ ஊழியர்கள், 700-க்கும் மேற்பட்ட தனி மருத்துவர்கள்
பங்கேற்றுள்ளனர். மேலும் 3 அரசு மற்றும் 3 தனியார் மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைகளும் 15 தனியார் மருத்துவமனைகளும் இதில் பங்கேற்றுள்ளன.
முதன்மை முகாம்கள்: 15 இடங்களில் நடைபெறும் முதன்மை முகாம்களில் சிறந்த
மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர். முகாம்களில் பெறப்படும் அனைத்து
தகவல்களும் கணினி மூலம் அட்டவணைப்படுத்தப்படுகின்றன.
மேலும் வார்டுக்கு 5 குடிசைப் பகுதிகள் வீதம் 1,000 குடிசைப் பகுதிகளில் முகாம்கள் நடப்படும்.
இதில் 1.5 லட்சம் சுய உதவிக்குழு அமைப்புகளின் மகளிர் மற்றும்
குடும்பத்தினர், அங்கன்வாடி குழந்தைகள், 1 லட்சம் வீடற்ற மக்கள், 25,000
மாநகராட்சி ஊழியர்கள், 1.5 லட்சம் ஹோட்டல் தொழிலாளர்கள், கோயம்பேடு, மெரீனா
கடற்கரை சிறு வியாபாரிகள், இடம் பெயர்ந்து சென்னையில் வசிப்போர் உள்ளிட்ட
சுமார் 20 லட்சம் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பயன் பெறுவார்கள் என்று அந்த
செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்கள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
முதல் நாளில் 86 ஆயிரம் பேர் பயன்
மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாமில் முதல் நாளில் மட்டும் சுமார் 86 ஆயிரம் பேர் பயன்பெற்றனர்.
200 இடங்களில் (வார்டுக்கு ஒன்று) நடைபெற்ற இந்த முகாம்களில், 27,735
ஆண்கள், 36,946 பெண்கள், 13,798 சிறுவர்கள், 7,761 சிறுமிகள் என முதல்
நாளில் மட்டும் மொத்தம் 86,240 பேர் பயன்பெற்றனர்.
முதன்மை முகாம் இடமாற்றம்
இந்த சிறப்பு மருத்துவ முகாம்களின் ஒரு பகுதியாக மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 முதன்மை முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த முகாம்கள் தினமும் ஒரே இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை சென்னை
மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற முதன்மை முகாம்,
லாயிட்ஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில்
வெள்ளிக்கிழமை நடைபெறும். மற்ற முதன்மை முகாம்களின் இடம் மாற்றப்படவில்லை.