தினகரன் 13.08.2010
தமிழில் பெயர் சூட்டப்படும் 1000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மாநகராட்சி அறிவிப்பு
துரைப்பாக்கம், ஆக. 13: தமிழில் பெயர் சூட்டப்படும் ஆயிரம் குழந் தைகளுக்கு, மாநகராட்சி சார்பில் முதல்வர் கையால் தங்க மோதிரம் பரிசு வழங்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருவான்மியூரில் மாநகராட்சி நடத்தும் சென்னை மேல்நிலை பள்ளியில் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) ஜோதி நிர்மலா தலைமை வகித்தார். தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மேயர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, 13,168 பேருக்கு இலவச டிவி பெட்டிகளை வழங்கி பேசியதாவது:
கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன், மயானங்களில் இறுதி சடங்கு செய்ய ஸி 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை செலவானது. இப்போது, எந்த கட்டணமும் இன்றி தகனம் நடக்கிறது. குளிர்சாதன பெட்டிகளையும் இலவசமாக வழங்குகிறோம்.
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1000 குழந்தைகளுக்கு முதல்வர் கையால் மோதிரம் வழங்கப்பட உள்ளது.
மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும் பெண்களுக்கு மூன்று வேளையும் சத்தான உணவு வழங்கும் திட்டம், செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்படுகிறது. இந்த உணவு, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும். மாநகராட்சி பகுதிகளில் 6,32,608 இலவச டிவி பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில், வேளச்சேரி, தரமணி பகுதிகளில் டிவி வழங்கப்படும். இவ்வாறு மேயர் பேசினார்.
துணை மேயர் சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, மண்டல குழு தலைவர் மு.ஜெயராமன், 155வது வார்டு கவுன்சிலர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர். சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் அன்பழகன் நன்றி கூறினார்.