தினமலர் 31.08.2010
பெரிய கோவில் 1,000வது ஆண்டு விழா நகரில் அடிப்படை வசதி மேம்படுத்த திட்டம்
தஞ்சாவூர்: “”தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு நகரில் அடிப்படை வசதிகளை மேம்பாடுத்த பல்வேறு திட்டப்பணிகள் செய்யப்படுகிறது,” என கலெக்டர் சண்முகம் தெரிவித்தார்.
தஞ்சை கலெக்டர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவுக்காக கோவிலின் உள்ளே, வெளியே கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரில் சில கட்டுமானப்பணிகள் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மிக முக்கியப்பணிகள் விழாவுக்கு முன்னதாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சில பணிகள் தொடர்ந்து செயல்படும். நகரின் அடிப்படை வசதியை மேம்பாடுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டுப்பணிகளாக ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை ரோடு, பெரிய கோவில் ரோடு, மருத்துவக் கல்லூரி ரோடு, குந்தவை நாச்சியார் கல்லூரி ரோடு, தெற்கு அலங்கம் போன்ற ரோடுகள் விரிவாக்கம் செய்யப்படும். நகரின் உட்புறம், குறுக்குச்சாலைகள் மேம்படுத்தப்படும். இதற்கான சாலைகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது.
தஞ்சை பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட்கள் சீரமைக்கப்பட்டு அங்குள்ள கழிவறைகள் மேம்படுத்தப்படும். நகரின் முக்கிய இடங்களில் கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்படும். பெரிய கோவில் அருகே மேம்படுத்தப்பட்ட கழிவறை நகராட்சி சார்பில் அமைக்கப்படும். பெரிய கோவில் அருகே கட்டிடம் எவ்வாறு அமைய வேண்டுமென இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் விதிகள் உள்ளதோ அதன்படி கழிவறை அமைக்கப்படும். தஞ்சை சாமந்தான் குளம் தூர்வாரி சீரமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.