தினமணி 17.09.2010
பன்றிக் காய்ச்சல்: 1000 தடுப்பூசிகள் கோரி மதுரை மாநகராட்சி கடிதம்
மதுரை, செப்.16: மதுரையில் மாநதகராட்சி மருத்துவமனைகளுக்கு முன்னெச்சரிக்கையாக பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் (ஹெச்1என்1) 1000 வழங்கவேண்டும் என, பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சலைத் தடுக்க, மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகராட்சிப் பகுதியில் உள்ள டாக்டர், மருத்துவப் பணியாளர்கள் என 70 பேருக்கு “எச்1என்1′ தடுப்பூசி முதல்கட்டமாக போடப்பட்டுள்ளது.
அதிகக் காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால், அது பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
அவர்களுக்கு, மதுரை மருத்துவமனையில் தனி சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சி சார்பில் செல்லூர், வில்லாபுரம், புதூர், பைகாரா, திடீர் நகர், அகிம்சாபுரம், சந்தைப்பேட்டை, எல்லீஸ் நகர், பெத்தானியாபுரம், கே.கே. நகர், அண்ணா நகர் உள்ளிட்ட 17 இடங்களில், மாநகராட்சியின் நகர் நலவாழ்வு மையங்களில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றன.
இக்காய்ச்சல் அறிகுறி உள்ளதாக தெரியவரும்போது, சம்பந்தப்பட்டவர்கள் இந்த மையங்களுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளலாம். அவர்களின் ரத்தம், தொண்டைச் சளி உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு, சோதனை நடத்தப்படும்.
1,000 தடுப்பூசிகள் : இந்நிலையில், மாநகராட்சியில் உள்ள 17 மையங்களுக்கும் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகள் இருப்பு வைப்பதற்காக முதற்கட்டமாக 1,000 தடுப்பூசிகள் கேட்டு, சென்னையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநருக்கு மதுரை மாநகராட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் அவை வந்து சேரவில்லை.
இது குறித்து, நகர் நல அலுவலர் டாக்டர் வி. சுப்பிரமணியன் கூறியது:மாநகராட்சிக்கு உள்பட்ட 17 மருத்துவமனைகளுக்கும் ஹெச்1என்1 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகள் கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவை வழங்கப்படும்பட்சத்தில் மாநகராட்சி மருத்துவமனைகளில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மாநகராட்சி தயாராக உள்ளது. இதுவரை மாநகராட்சி பகுதியில் யாரும் இந்த நோயால் பாதிக்கப்படவில்லை என்றார்