தினமணி 16.08.2013
தினமணி 16.08.2013
10,000 பேருந்துகள் வாங்குவதற்கு அமைச்சரவை குழு அனுமதி
ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத்
திட்டத்தின் (ஜேஎன்என்யுஆர்எம்) கீழ், நகர்ப்புறப் போக்குவரத்துக்கு 10,000
பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான நிதியை வழங்க பொருளாதார
விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது.
இத்திட்டத்தில் மலைப்பிரதேச மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன்,
அனைத்து நகரங்களுக்கும் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
புது தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை
நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான
முடிவு எடுக்கப்பட்டது. ஜேஎன்என்யுஆர்எம் திட்டத்தின் கீழ் பேருந்துகளை
கொள்முதல் செய்வதற்கும், துணை உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதற்கும் ரூ.
6,300 கோடி செலவாகும்.
இந்த வகையில், கூடுதல் மத்திய உதவி சுமார் 4,450 கோடியாக உள்ளது.
இந்த நிதி, குறிப்பாக பெருநகரங்களிலும், நகரங்களிலும் நகர்ப்புறப்
போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு உதவிடும் என்று அமைச்சரவை வட்டாரங்கள்
தெரிவித்தன.