தினமலர் 19.11.2010
103 ஆக்கிரமிப்பு வீடுகள் தூள் தூள்திருவான்மியூர் : கஸ்தூரிபாய்நகர் – திருவான்மியூர் இடையே இணைப்புச் சாலை அமைப்பதற்காக, பக்கிங்காம் கால்வாயை ஒட்டி ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 103 வீடுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று அதிரடியாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. வீடுகளை இழந்தவர்கள், உடனடியாக குடியேறுவதற்கு வசதியாக துரைப்பாக்கம் கண்ணகி நகர் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன.சென்னை நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஆங்காங்கே சாலைகள் மற்றும் மேம்பாலப்பணிகள் நடந்து வருகின்றன.அதன் ஒரு கட்டமாக, கஸ்தூரிபாய் நகரில் இருந்து திருவான்மியூர் வரை இணைப்பு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருவான்மியூர் பகுதியில் கெனாலை ஒட்டி ஆக்கிரமித்து கட்டப்பட்ட 103 வீடுகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறைப்படி நோட்டீஸ் வழங்கி, கால அவகாசம் கொடுத்தனர்.ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் மெத்தனப்போக்குடன் இருந்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை மற்றும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு, ஆக்கிரமிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக குடியேறும் வகையில் துரைப்பாக்கம், கண்ணகி நகரில் குடியிருப்புகள் ஒதுக்கிக் கொடுப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். ஆனாலும் சில ஆக்கிரமிப்பாளர்கள் முரண்டு பிடித்தனர். இதையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது.காலை 9 மணிக்கு துவங்கிய ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மாலை வரை நீடித்தது. அதே நேரம், ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் பொருட்களுடன் கண்ணகி நகரில் உடனடியாக குடியேறுவதற்கு வசதியாக அரசு சார்பில் வாகன ஏற்படும் செய்யப்பட்டது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,” கஸ்தூரிபாய் நகரில் இருந்து திருவான்மியூர் வரை பக்கிங்காம் கால்வாயை ஒட்டி ஒரு கிலோ மீட்டர் தூரத்தற்கு 18 மீட்டர் அகலம் கொண்ட இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது.அதற்காக ஆக்கிரமிப்புகள் இன்று(நேற்று) அகற்றப்பட்டன. பக்கிங்காம் கால்வாய்க்கு, தற்போது தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல, சாலைக்கு தேவையான இடம் விட்டு, வீடுகளை ஒட்டியும் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிந்தவுன் தார் சாலை அமைக்கும் பணி துவக்கப்படும்‘ என்றனர்.