தினமணி 19.11.2009
வடக்கு மண்டலத்தில் ரூ. 10.50 லட்சத்தில் ஆழ்குழாய்கள்
மதுரை, நவ. 18: மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குள்பட்ட 5-வது வார்டு புதூர் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய்களை, மேயர் ஜி. தேன்மொழி புதன்கிழமை திறந்துவைத்தார்.
திருவள்ளுவர் நகர், மண்மலைமேடு, தேசிய விநாயகர் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, ராமாவர்மா நகர் ஆகிய பகுதிகளில் ரூ. 10.50 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அவற்றைத் திறந்துவைத்து மேயர் கூறுகையில், “தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி நிறைவேற்றிவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்‘ என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், வடக்கு மண்டலத் தலைவர் க. இசக்கிமுத்து, உதவி ஆணையர் (வடக்கு) எஸ். சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.