தினகரன் 03.06.2010
ஹசரத் நிஜாமுதீன் பகுதியில் ரூ.10.67 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள்
புதுடெல்லி, ஜூன் 3: காமன்வெல்த் போட்டிகளின்போது சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் ஹசரத் நிஜாமுதீன் பகுதியில் ரூ.10.67 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
தெற்கு டெல்லி ஹசரத் நிஜாமுதீன் பகுதியில் ஹசரத் நிஜாமுதீன் தர்கா, மசார் &இ&காலிப், ஹுமாயூன் சமாதி உள்ளி ட்ட பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளன. உலகம் முழுவதும் இரு ந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். அக்டோபர் மாதத்தில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளின்போது அதிக சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெரிசல் மிக்க நிஜாமுதீன் பகுதியில் வாழும் மக்கள் நல்ல சூழலில் வாழுகிறார்கள் என்று வெளிநாட்டு ரசிகர்கள் எண்ணுமளவுக்கு, அப்பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக, அகாகான் கலாச்சார அறக்கட்டளை சார்பில் ரூ.10.67 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாநகராட்சியிடம் அளிக்கப்பட்டது. அதை மாநகராட்சி ஏற்றுக் கொண்டு, நிஜாமுதீன் பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் வண்ணவண்ண டைல்ஸ்கள் பதிக்கும் பணி, மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள், கழிப்பிட வளாகங்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகளை தொடங்கியுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “காமன்வெல்த் போட்டிக்கு மிகவும் குறைவான நாட்களே உள்ளன. அதனால் பணிகளை விரைந்து முடிப்பதற்காக ஒவ்வொரு தெருவுக்கும் தனித்தனியாக திட்ட மதிப்பீடுகளை தயாரித்து பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.