தினமலர் 20.08.2012
ரூ.108 கோடியில், 1,200 சாலைகள் போட திட்டம்
சென்னை:சென்னை மாநகரில் உள்ள, 1,200 சாலைகள், 108 கோடி ரூபாயில், புதிதாக போட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள், செப்டம்பர் 1ம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள், குறுகிய காலம் கூட தாக்குப் பிடிக்காமல் சேதமடைவதால், பிளாஸ்டிக் சாலைகளாக போடும் திட்டத்தை மாநகராட்சி அறிவித்தது. ஒப்பந்ததாரர் தேர்வுஇதன்படி, இந்த ஆண்டுக்கு, 1,200 சாலைகள், 108 கோடி ரூபாயில் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக சாலைகள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறும்போது, “”44 சிப்பங்களாக பிரித்து, 1,200 சாலைகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில், 40 சிப்பங்களில் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதில், 956 சாலைகளுக்கு ஒப்பந்தாரர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த வார மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, பணி ஆணை உடனே வழங்கப்படும். செப்டம்பர் 1ம் தேதி முதல் சாலைப் பணி துவங்கும்,” என்றார்.விடுபட்ட, நான்கு சிப்பங்களில், 241 சாலைகள் உள்ளன.இதற்கு மறு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
இதையும் வேகப்படுத்தி, உடனே பணிகள் துவக்கப்படும் எனவும், சாலைகள் அனைத்தும், பிளாஸ்டிக் கலந்த தார் சாலைகளாகவே போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்ணாநகர் இல்லைஅதிகபட்சமாக, மாதவரம் மண்டலத்தில், 211 சாலைகளும், வளசரவாக்கம் மண்டலத்தில், 119 சாலைகளும் போடப் பட உள்ளன. ராயபுரம் மண்டலத்தில், குறைந்த அளவில் 14 சாலைகளும், அம்பத்தூர் மண்டலத்தில் 34 சாலைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அண்ணா நகர் மண்டல சாலைகள், சிமென்ட் சாலைகள் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், அந்த மண்டலத்தில் தார் சாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது.