தினமலர் 23.07.2010
108 நாட்களுக்கு பின், நகராட்சி கூட்டம் கூடியது! மளமளவென 64 தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி கூட்டம், 108 நாட்களுக்கு பின் நேற்று நடந்தது; 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்ட விவாதம் வருமாறு:கல்யாணி (அ.தி.மு.க.,): எங்களுடைய வார்டில் வரிவிதிப்பில் பாரபட்சம் காட்டப்படுகிறது. நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட இதுவும் ஒரு காரணம். மற்ற வார்டுகளில் பொதுமக்கள் கொடுத்தாலே வரி விதிக்கப்படுகிறது. ஐந்தாவது வார்டில் மட்டும் கவுன்சிலர் வந்தாலும் வரி விதிப்பதில்லை.செயல் அலுவலர் குற்றாலிங்கம்: பொதுமக்கள் கொடுக்கும் எந்த விண்ணப்பமும் நிறுத்தி வைப்பதில்லை; உடனுக்குடன் கையெழுத்து போடப்படுகிறது.
மோகன்ராஜ் (தி.மு.க.,): வரி விதிப்பு, குடிநீர் இணைப்புக்கான தகவலை பொதுமக்கள் கேட்டும்போது நகராட்சி அலுவலகத்தில் இருந்து வழங்குவதில்லை.
நடராஜ் (பா.ஜ.,): குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க, தொடர்ந்து காலம் தாழ்த்தப்படுகிறது.செயல் அலுவலர்: இருக்கும் பணியாளர்கள் கொண்டு, தற்போதைய வேலைகளை மட்டுமே செய்ய முடியும்.
ராஜேந்திரன் (தி.மு.க.,): குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக, ஒவ்வொரு முறையும் ஒரிஜினல் ஆவணங்களை கேட்பது, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. ஜெராக்ஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.செயல் அலுவலர்: ஒரிஜினல் ஆவணங்களை பெறுவது நிர்வாகத்துக்கு சட்டச்சிக்கல் வரக்கூடாது என்பதற்காக மட்டுமே.
விஜயா (இ.கம்யூ.,): ஒன்றாவது வார்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி பல இடங்களில் இன்னமும் முடியவில்லை. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு ஆசிரியர்கள் வரவே இல்லை.செயல் அலுவலர்: நேற்று 4,000 விண்ணப்பங்கள் வந்தன. அனைத்தும் ஆசிரியர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி முடியும்.தலைவர் மணி: நகராட்சி முழுவதும் குறைந்தது 10 ஆயிரம் பேரிடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறாமல் உள்ளது. இதுதொடர்பாக அனைத்து கவுன்சிலர்களும் கையொப்பமிட்டு, கலெக்டரிடம் மனு அளிக்கலாம்.
பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.,): கடந்த நான்கு ஆண்டுகளில் நகராட்சியால் கோரப்பட்ட டெண்டர், முடிக்கப்பட்ட பணி குறித்து “வெள்ளை அறிக்கை‘ வெளியிட வேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு முன், விரைவில் டெண்டர் வைக்கப்பட்டு பணிகள் முடிந்துள்ளன; தற்போது சிறு பணிகள் கூட தாமதிக்கப்படுகிறது.நகராட்சி பொறியாளர் மல்லிகா: மதிப்பீடு செய்யப்படாத பணிகளுக்கு டெண்டர் வைக்க முடியாது.பாலகிருஷ்ணன்: துப்புரவு பணியாளர்கள் பலர் பணிகளை செய்யாமல், பொழுது போக்குகின்றனர். அனுப்பர்பாளையத்தில் பணியாளர்களுக்கு வருகை பதிவேடு வைக்கப்பட்டது போல், அன்றைய தினம் செல்லும் இடத்தில் யார் வந்தார்கள் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.தலைவர்: விரைவில் வருகைப்பதிவேடு தயார் செய்யப்படும்.
குணசுந்தரி (மா.கம்யூ): அருமைக்காரர் தோட்டத்தில் மின் கம்பம் மாற்றுவது தொடர்பான தீர்மானம், ஜன., மற்றும் ஏப்., மாத நகராட்சி கூட்டத்தில் தீர்மானமாக வைக்கப்பட்டது; தற்போதும் வைக்கப்பட்டுள்ளது. எப்போது நிறைவேற்றுவீர்கள். எங்களை நகராட்சி ஏமாற்றுகிறதா?பொறியாளர்: தீர்மானம் நிறைவேற்றி, டெண்டர் விட்டாச்சு; ஒப்பந்ததாரர்கள் பணிகளை நிறைவேற்றி முடிக்காததற்கு, நாங்கள் என்ன செய்ய முடியும். நீங்கள் அவர்களிடம் தான் கேட்ட வேண்டும்.
துணை தலைவர் சரோஜா (மா.கம்யூ): கவுன்சிலர்கள், மக்கள் குறைகளை கூறுவதற்கு தான் நகராட்சி கூட்டம். ஒப்பந்ததாரர்களிடம் பேச்சு நடத்துவதற்கு இல்லை.பாலகிருஷ்ணன்: நகராட்சி பணியாளர்கள் யார் என்றே தெரியவில்லை. குப்பை லாரியில் குப்பையை விட பணியாளர்களே அதிகமாக ஏறிக்கொள்கின்றனர். துப்புரவு பணியாளர்கள் இல்லை என்று நகராட்சி புலம்புவது புதிராக உள்ளது.
தேவி (தி.மு.க.,): 10 நாட்களுக்கு ஒரு முறையாவது வார்டுக்குள் சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும்.
சரோஜா: குறிப்பிட்ட சில வார்டுகளில் தெருவிளக்கு பொருத்த தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது.பொறியாளர்: உபகரணங்கள் அனைத்தும் “ஸ்டாக்‘ உள்ளது. விரைவில் பொருத்தப்படும். சில நேரங்களில் “டெலிவரி‘ எடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம்.
தலைவர்: தெருவிளக்குகள் குறைவாக உள்ள வார்டுகளுக்கு 100 விளக்குகளை விரைவில் பொருத்தும்படி
அறிவுறுத்த வேண்டும்.நாகராஜ் (ம.தி.மு.க.,): தண்ணீர் பிரச்னைக்கு நகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒன்பது நாள் தாண்டி, தற்போது 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. மின்வாரியம் விழிக்க வேண்டும்; பணிகள் முடங்கிக் கிடக்கிறது.குணசுந்தரி (மா.கம்யூ.,): குமரன் வீதி, மாரப்பக்கவுண்டர் வீதி, அருமைக்காரர் தோட்டம் பகுதிகளில் புதிய மின்கம்பம் ஏற்படுத்த வேண்டும்.சுப்ரமணியம் (அ.தி.மு.க.,): வார்டில் கூடுதலாக குடிநீர் குழாய் அமைக்க வேண்டும். தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியவில்லை.தலைவர்: மக்கள் தொகைக்கேற்ப மட்டுமே குடிநீர் குழாய் அமைக்கப்படும்.செயற்பொறியாளர்: கவுன்சிலர்கள் கேட்கும் அனைத்து பணிகளையும் செய்ய நகராட்சியிடம் போதிய நிதி இல்லை.தலைவர்: ஆக., 1ல் திருப்பூர் வரும் துணை முதல்வர் குடிநீர் பிரச்னைக்கு கட்டாயம் முற்றுப்புள்ளி வைப்பார்.இவ்வாறு, விவாதம் நடந்தது.டெண்டர் கோரப்பட்ட பணிகள் முடிவடையாதது மற்றும் குடிநீர் பிரச்னையை கண்டித்து, பா.ஜ., கவுன்சிலர் நடராஜன், அ.தி.மு.க., கவுன்சிலர் சுப்ரமணியம் வெளிநடப்பு செய்தனர்.