தினமலர் 04.09.2012
முகலிவாக்கத்தில் 11 கி.மீ., நீளத்தில் சாலை மூன்று மாதத்தில் முடிக்க திட்டம்
முகலிவாக்கம்:ஊராட்சியாக இருந்து மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்ட முகலிவாக்கம் பகுதியில், 11 கி.மீ., சாலை அமைக்க, மாநகராட்சி 10 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்த பணியை மூன்று மாதத்தில் முடிக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.மாநகராட்சி 156வது வார்டாக முகலிவாக்கம் உள்ளது. முன்பு ஊராட்சி அமைப்பாக இருந்தது. இது ஆலந்தூர் மண்டல வார்டு பரப்பளவில் பெரியது. தெருக்கள் அதிகம். விவசாய நிலங்களும் உள்ளன. நெல், வாழை, கீரை போன்றவை பயிரிடப்படுகிறது. கிராமிய மணம் முகலிவாக்கம் பகுதியில் சூழ்ந்திருக்கும்.ஊராட்சியாக இருந்தபோது, கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தன.
மாநகராட்சியுடன் இணைந்தபிறகு, கூடுதல் கவனம் செலுத்தி, போதிய நிதி ஒதுக்கீடு செய்து, சாலை, தெருவிளக்கு, மழைநீர் வடிகால் போன்ற கட்டமைப்புடன், நவீன சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பகுதியில் 31 சாலைகள் அமைக்க, 10 கோடி ரூபாய் மாநகராட்சி நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டு உள்ளது. 11 கி.மீ., நீளமும், 80 ஆயிரத்து, 810 சதுர மீட்டர் பரப்பளவிலும் இந்த சாலை அமைய உள்ளது.
தற்போது இருக்கும் கரடு முரடு சாலைகளை, தோண்டி நான்கு அடுக்கு கட்டமைப்பில் சாலை அமைகிறது.20 செ.மீ., கனத்தில் பெரிய ஜல்லி போடப்பட்டு சம படுத்தப்படும். அதற்கு மேல், 20 செ. மீ., கன அளவில், பாறைப்பொடியுடன் கலந்த ஜல்லி போட்டுசமப்படுத்தி, அதற்குமேல், 5 செ.மீ., கனத்தில் பெரிய ஜல்லி மிக்சர் போட்டு சமபடுத்தப்படும். அதற்குமேல், 4 செ.மீ., கன அளவில் சிறிய ஜல்லி கலந்த மிக்சர் கலவை போட்டு சமபடுத்தப்படும். மொத்தத்தில், சாலை அரை மீட்டர் கனஅளவில் சாலை அமைய உள்ளன. இந்த பணியை மூன்று மாதக்காலத்தில் முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.மண்டல அதிகாரி ஒருவர் கூறும்போது, “”ஊராட்சியாக இருந்த முகலிவாக்கம் பகுதிக்கு, கூடுதல் கவனம் செலுத்தி, சாலை அமைக்க, மாநகராட்சி 10 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. தரமான சாலையாக அமையும் இந்த பணியை, மூன்று மாதக்காலத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறினார்.