தினமணி 30.06.2010ச்
வாணியம்பாடியில் ரூ.11 லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்கு
வேலூர், ஜூன் 29: வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் ரூ.11 லட்சத்தில் மின்கோபுர விளக்கு நிறுவ நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வாணியம்பாடி நகர்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகர்மன்றத் தலைவர் வி.சிவாஜிகணேசன் தலைமை வகித்தார். ஆணையர் எம்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளிக்கு 4 கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்ட ரூ.10 லட்சத்தில் பணி மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும், வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் பெரியபேட்டை கோட்டை, சென்னாம்பேட்டை சந்திப்பில் ரூ.11 லட்சத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. காந்திநகர் நகராட்சிப் பள்ளிக்கு 4 வகுப்பறைகள் கட்ட ரூ.10 லட்சம் ஒதுக்கீடு, நகரில் உள்ள நகராட்சிப் பள்ளிகள் 4-க்கு தலா ரூ.3 லட்சத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உறுப்பினர் ஆர்.விஜயகுமார் பேசும்போது, “சுப்பிரமணியம் கோயில் தெருவில் கடந்த 100 ஆண்டுகளாக வசிக்கும் பர்மா அகதிகள் 60 பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி பல முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை‘ என்றார்.
இதற்குப் பதிலளித்த தலைவர் சிவாஜிகணேசன், “இதுபற்றி அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்