தினமணி 21.04.2010
110 குழந்தைகளுக்கு இலவச பிறப்புச் சான்றிதழ்
போடி, ஏப். 20: போடி நகராட்சியில் நடைபெற்ற இலவச பிறப்புச் சான்றிதழ் வழங்கும் முகாமில், 110 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
போடி நகராட்சியில் பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வது கட்டாயம் என்பதை நகராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, நகராட்சி நிர்வாகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. இதன்படி போடி நகராட்சி எல்கைக்குள் பிறக்கும் குழந்தைகளின் விவரங்களை, நகராட்சி அதிகாரிகளே நேரில் சென்று சேகரித்து அவர்களுக்கு 24 மணிó நேரத்தில் இலவச பிறப்புச் சான்றிதழ் வழங்க ஆணையர் க.சரவணக்குமார் உத்திரவிட்டார்.
இத்திட்டம் போடி நகர மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் சில தனியார் மருத்துவமனையில் ஊழியர்கள் பணம் பெற்றுச் சென்று பதிவு செய்த நிலை மாறி, பிறந்த உடன் இலவச பிறப்புச் சான்றும் குழந்தைகளுக்கு கிடைத்து வந்தது.
தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பிறப்புச் சான்றிதழ் வழங்கும் முகாமை ஆணையர் அறிவித்தார்.
அதன்படி திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாலை வரை 110 பேர் பிறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களது விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் குழந்தைகளின் பெயரை பதிவு செய்யாமல் பிறப்பு பதிவு செய்தவர்களுக்கு தனி விண்ணப்பம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு, பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.