தினமலர் 21.05.2010
இரவு 11.00 மணி வரை ஓட்டல் செயல்பட அனுமதி
திருப்பூர்: திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள ஓட்டல்கள் இரவு 11.00 மணி வரை செயல்பட, போலீசார் அனுமதித்து உள்ளனர். திருப்பூரில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் இரவு 9.00 மணியில் இருந்து 10.00 மணிக்குள் மூடப்பட்டு விடுகின்றன. ஓட்டல்கள் மற்றும் ரோட்டோர தள்ளுவண்டி உணவகங்கள் மட்டுமே 11.00 மணி வரை செயல்பட்டு வருகின்றன. சில நாட்களாக, இரவு 10.30 மணிக்குள் ஓட்டல்களை மூடுமாறு, போலீசார் கட்டாயப்படுத்தினர்; இதனால், 11.00 மணி வரை செயல்படும் ஓட்டல்கள் கூட, சில நாட்களாக 10.30 மணிக்கு முன்னதாக மூடப்பட்டு வருகின்றன. திருப்பூரில் வசிக்கும் ஏராளமான தொழிலாளர்கள் மூன்று வேளை உணவுக்கும் ஓட்டல்களையே நம்பி உள்ளனர்.
இரவு 10.30 மணிக்கு பின், வெளியூரில் இருந்து குடும்பத்துடன் திருப்பூர் வருபவர்கள்; 10.00 மணி “ஷிப்டு‘ முடித்து தொழிற்சாலைகளில் இருந்து வருபவர்கள், இரவு உணவு சாப்பிட ஓட்டல் இல்லாமல் தடுமாறுகின்றனர். அந்நேரங்களில் மற்ற கடைகளும் மூடி இருப்பதால், பிஸ்கட், ரொட்டி, பழத்தை வாங்கி கூட, பசியாற முடியாத நிலை உருவாகிறது. இதுகுறித்து திருப்பூர் டி.எஸ்.பி., ராஜா கூறுகையில், “”சட்டம் – ஒழுங்கை
பாதுகாக்க, நகருக்குள் பல்வேறுமுன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஓட்டல்களை இரவு 10.30 மணிக்குள் மூட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. இரவு 11.00 மணி வரை ஓட்டல் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது,” என்றார்.