தினமணி 05.09.2012
வரி செலுத்தாத 114 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: தெற்கு தில்லி மாநகராட்சி பரிசீலனை
புது தில்லி, செப். 4: வரி செலுத்தாத 114 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்குவது குறித்து தெற்கு தில்லி மாநகராட்சி பரிசீலித்து வருகிறது.
“பல முறை நினைவூட்டல் கடிதங்கள், நோட்டீஸ்கள் அனுப்பியும் சொத்து வரி உள்ளிட்ட வரிகளை அவர்கள் செலுத்தவில்லை.எனவே, அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்’ என்று மாநாகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர்கள் செலுத்த வேண்டிய மொத்த நிலுவை வரி ரூ. 10 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
தெற்கு தில்லியின் மத்திய மண்டலப் பகுதியில் 60 பேரும், தெற்கு மண்டலத்தில் 29 பேரும், நஜஃப்கர் மண்டலத்தில் 25 பேரும் சொத்து வரி நிலுவை வைத்துள்ளனர் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தில்லியின் மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும் 40 லட்சம் வீடுகள், கட்டடங்கள் இருக்கின்றன.வரி நிலுவை வைத்திருப்போரின் சொத்துகளை ஏலத்தில் விடுவது குறித்து கடந்த ஆண்டு, தில்லி மாநகராட்சி மூன்றாக பிரிக்கப்படுவதற்கு முன்பாக பரிசீலிக்கப்பட்டது. எனினும், மாநகராட்சி பிரிப்பு காரணமாக அது குறித்து முடிவெடுக்கப்படவில்லை.