தினமணி 30.11.2010
114 கி.மீ. சாலைகளை ரூ. 33.5 கோடியில் சீரமைக்கத் திட்டம்மதுரை,நவ. 29: மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட 114 கிலோமீட்டர் நீளச் சாலைகள் ரூ. 33.5 கோடியில் புதுப்பிக்கும் பணி, டிசம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ளதாக மாநராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி கூட்ட அரங்கில், திங்கள்கிழமை சுகாதாரப் பணியாளர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர், அவர் கூறியதாவது:
கழிவு அகற்றத் தடை விதிப்பு : பாதாளச் சாக்கடை குழிகளிலும், செப்டிக் டேங்குகளிலும் கழிவுகளை அகற்ற, மனிதர்களை இறக்கிப் பணி செய்ய உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (நவ.29) முதல் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.
இதனை மாநகராட்சி ஊழியர்களும், பொதுமக்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கழிவை அகற்ற ஜெட்ராடிங் மற்றும் டிசில்டிங் எந்திரங்கள் மாநகராட்சி வசம் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி இப்பணியை மேற்கொள்ள வேண்டும். முறையான கருவிகளுடன் கூடிய தனியார் வாகனங்களைப் பயன்படுத்தத் தடை இல்லை.
வீடுகள், ஓட்டல்கள்,தங்கும் விடுதிகள்,திருமண மண்டபம்,தொழிற்சாலைகள் என செப்டிக் டேங்க் உள்ள அனைத்து இடங்களுக்கும் இது பொருந்தும். இதனை மீறி மனிதர்களை பயன்படுத்துவது தெரியவந்தால், காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அலுவலக ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதாளச் சாக்கடை குழி இடிந்து விடுவது, மூடி உடைந்து விழுந்து விடுவது, பாதாளச் சாக்கடையில் புதிதாக இணைப்பு தருவது,பம்பிங் ஸ்டேஷன் மோட்டார் பழுது நீக்கம் போன்ற சில வேலைகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உள்ளது.
இவற்றிலும், உள்ளே கழிவுநீரை அறவே அகற்றிய பிறகே பாதுகாப்புக் கவசம் அணிந்து மனிதர்கள் இறங்கி வேலை செய்ய வேண்டும். கழிவு நீர் கலக்கத் தடை: மழை நீர் வடிகால்,வாய்க்கால்கள், ஆறுகளில் கழிவுநீரை கலக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் இணைப்பு இல்லாதவர்கள் அதற்கான இணைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதற்கென செப்டிக் டேங்க் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
டையாபார்ம் தொட்டி: ஓட்டல்கள்,லாட்ஜ்கள், மாடு வளர்க்கும் இடம் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றில் கழிவுநீரை வெளியேற்றும்போது, அதில் பிளாஸ்டிக் கழிவுகள்,மாட்டுச்சாணம் போன்றவை கலந்து வருவதால் கழிவுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு விடுகிறது.
எனவே, மேற்கண்ட இடங்களில் கழிவு நீரை அகற்றுவதற்கு, டயாபார்ம் எனப்படும் தொட்டியை வடிவமைத்து அதன்மூலம் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். டிசம்பர் 15-க்குள் இந்த அமைப்பை நிறுவிக் கொள்ள வேண்டும்.
சாலைகள் சீரமைப்பு: மதுரை நகரில் பழுதான நிலையில் சாலைகள் உள்ளன. வடிகால் அமைப்பு பணிகள், வைகை குடிநீர் திட்டப் பணிகள், பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இவற்றைச் சீரமைப்பதற்கு அரசு ரூ. 33.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான டென்டர் விடப்பட்டு வேலை ஆர்டர்கள் வழங்கப்பட்டு விட்டன. டிசம்பர் 1-ம் தேதி முதல் சாலை அமைப்பு பணிகள் துவங்கிவிடும்.
மொத்தம் 114 கிலோ மீட்டர் நீளம் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன. இதில், பாதாளசாக்கடை, குடிநீர் திட்டப்பணிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சாலைகள் போடப்படும் என்றார். வண்டியூர் கண்மாய்த் திட்டம் குறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் சக்திவேல் கூறும்போது, 58 ஏக்கர் பரப்பளவுள்ள வண்டியூர் கண்மாயில் 3 முதல் 4 மீட்டர் வரை ஆழம் உள்ளது.
அதை மேலும் ஆழப்படுத்துவதன் மூலம் கூடுதலாக 40 சதவீதம் தண்ணீர் இருப்பு வைக்க முடியும். அதில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் தீம்பார்க் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டம் வடிவமைக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.