தினகரன் 30.11.2010
மழையினால் சேதமடைந்த 114 கிலோ மீட்டர் சாலைகள் 7 நாட்களில் சீரமைக்கப்படும் மாநகராட்சி கமிஷனர் தகவல்மதுரை, நவ. 30: மதுரையில் மழையினால் சேதம் அடைந்துள்ள 114 கிலோ மீட்டர் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.33.50 கோடி அனுமதி அளித்து டெண்டர் விடப்பட்டுள் ளன. டிசம்பர் முதல் வாரம் இந்த சாலை அமைக்கும் பணி துவங்கும் என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
மதுரை மாநகரா£ட்சி ஆணையாளர் செபாஸ்டின் கூறியதாவது: பாதாள சாக்கடை தொட்டி மற்றும் வீடுகளில் உள்ள செப்டிக் டேங்குகளில் ஆட்கள் இறங்கி சுத்தம் செய்வதற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தடைவிதித்து அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் பாதாள சாக்கடை தொட்டி மற்றும் வீடுகளில் உள்ள செப்டிக் டேங்குகளில் மாநகராட்சி பணியாளர்கள் உள்பட யாரும் இறங்க கூடாது.
வீடுகளின் உரிமையாளர்களும் வெளியாட்களை இறங்க செய்ய கூடாது. இதனை மீறினால் பணியாளர், வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை இணைப்பும் துண்டிக்கப்படும். அடைப்புகளை சுத்தம் செய்ய மாநகராட்சியில் இயந்திரங்கள் மூலம் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும்.
ஓட்டல்கள், லாட்ஜ்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் இருந்து கழிவுநீரை பாதாள சாக்கடையுடன் விடுவதற்கு ‘பில்டர்‘ செய்யும் அமைப்பை அந்தந்த நிறுவனங்களே ஏற்படுத்த வேண்டும். நேரடியாக பாதாள சாக்கடைக்குள் கழிவுநீரை விடக்கூடாது. பிளாஸ்டிக் கழிவுகள் பாதாள சாக்கடையை அடைத்து விடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கும் பூ மார்க்கெட்டுக்கும் இடையில் உள்ள 27 ஏக்கர் நிலத்தில் மல்டி லெவல் சிட்டி மார்க்கெட் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சிங்கப்பூர் நிறுவனம் இதற்கான அனுமதியை கேட்டுள்ளது. இதில் ஸ்டார் ஓட்டல், தியேட்டர்கள் மற்றும் வர்த்தக மையங்கள் இருக்கும். இதன் அருகிலுள்ள வண்டியூர் கண்மாயில் நூறு ஏக்கரில் தீம் பார்க் அமைக்கவும் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அரக்கு அனுப்பி வைக்கப்படும்.
மழையினால் நகரில் உள்ள ரோடுகள் அதிகளவில் சேதம் அடைந்துள்ளன. ரோடுகளை சீரமைக்க ரூ.33.50 கோடி அனுமதி அளித்து டெண்டர் விடப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் சாலை அமைக்கும் பணி துவங்கும். 114 கிலோ மீட்டரில் சாலைகள் சீரமைக்கப்படும். முன்னதாக ரோடுகளில் உள்ள பள்ளங்கள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.
மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே ஆம்னி பஸ்நிலையம் அமைக்கவும், லாரி நிலையம் அமைக்கவும் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தலைமை பொறியாளர் சக்திவேல், துணை ஆணையர் தர்பகராஜ் உடனிருந்தனர்.