தினமலர் 12.02.2010
நடைபாதை வியாபாரிகளுக்கு 1,149 கடைகள் தயாராகின்றன
சென்னை : “”நடைபாதை வியாபாரிகளுக்காக சென்னையில் மூன்று இடங்களில் 5.78 கோடி ரூபாய் செலவில் 1,149 கடைகள் கட்டப்பட்டு வருகிறது,” என மேயர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தி.நகர் பாண்டி பஜாரில் நடைபாதை வியாபாரிகளுக்கு 4.30 கோடி ரூபாயில் மூன்று மாடி கட்டடம் மாநகராட்சியால் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை நேற்று காலை மேயர் சுப்பிரமணியன் ஆய்வு செய்து நிருபர்களிடம் கூறியதாவது:சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், பூங்கா நகர் ரயில் நிலையங்கள் அருகில் இருந்த நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டு, மாற்றாக அவர்களுக்கு அல்லிகுளம் வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.
அதுபோல், தி.நகரில் தியாகராயர் சாலை, உஸ்மான் ரோடு, சிவபிரகாசம் சாலை, பனகல் பூங்கா ஒட்டியுள்ள நடைபாதைக் கடைகளை அகற்றி, அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வசதியாக பாண்டி பஜாரில் 4.30 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.கட்டுமானப் பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் முடியும். இதில், 692 வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த கட்டடத்தில் மூன்று லிப்டுகளும், 36 கழிப்பிடங்களும் அமைக்கப்படும்.அயனாவரம், பாலவாயல் மார்க்கெட் சாலையில், 1.23 கோடி ரூபாய் செலவில், 332 நடைபாதை கடைகளுக்கான கட்டுமானப் பணி நடந்து வருகிறது. வடசென்னையில் ராயபுரம் எம்.சி., சாலை, சுழல்மெத்தை அருகில் இருந்த நடைபாதை வியாபாரிகளுக்கு 25 லட்ச ரூபாய் செலவில் 125 கடைகள் கட்டப்படுகின்றன.நடைபாதை வியாபாரிகளுக்காக மூன்று இடங்களில் 5.78 கோடி ரூபாயில், 1,149 கடைகளை கட்டி வருகிறது.இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.ஆய்வின்போது, கோடம்பாக்கம் மண் டல தலைவர் ஏழுமலை, மண்டல அதிகாரி ஞானமணி ஆகியோர் இருந்தனர்.