தினமலர் 07.12.2011
மேற்கு மண்டலத்தில் ரோடு, குடிநீர் பிரச்னை: ரூ.1.15 கோடி ஒதுக்க முடிவு
கோவை : “ரூ. ஒரு கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப்பணி மேற்கொள்வது’ என, மேற்குமண்டல கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேற்குமண்டல ஆபீசில் நடந்த கூட்டத்துக்கு மண்டல தலைவர் சாவித்திரி தலைமை வகித்தார்; உதவிகமிஷனர் முத்துசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மண்டலத் தலைவர் சாவித்திரி பேசுகையில்,””மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 17ம் வார்டில், மருதமலை கோவிலின் திருப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. முதல்வரை அழைத்து, இக்கோவில் கும்பாபிஷேக விழா நடத்தவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,” என்றார். வீரகேரளம், சொக்கம்புதூர், தடாகம் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வார்டிலுள்ள ரோடு, சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.மேற்குமண்டலத்துக்கு உட்பட்ட 20 வார்டுகளில் குடிநீர், ரோடு சீரமைப்பு, மழை நீர்வடிகால் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வளர்ச்சிப் பணிக்காக, ரூ. 1 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இக்கூட்டத்தில், வீரகேரளம்பகுதி கவுன்சிலர் மயில்சாமி, சுண்டப்பாளையம் பகுதி கவுன்சிலர் குணசுந்தரி உள்பட பலர் பங்கேற்றனர்.