தினமணி 29.03.2010
பெருவழிக்கடவு பாலம், சாலைகளுக்கு ரூ. 1.19 கோடி ஒதுக்கீடு
குலசேகரம், மார்ச் 28: திருவட்டார் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெருவழிக்கடவு உள்ளிட்ட பல்வேறு சாலைகளைச் சீரமைக்க ரூ. 1.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, திருவட்டார் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர். லீமாரோஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருவட்டார் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்றதாகக் காணப்பட்டன. அவற்றைச் சீரமைக்கக் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் குலசேகரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் நடைபெற்றது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையிலும் வலியுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் முதற்கட்டமாக ஆலுவிளை–சிதறால் சாலை, அருமனை–ஆற்றூர் சாலை, சுருளகோடு–தெரிசனம்கோப்பு சாலை, அருமனை–பனச்சமூடு சாலை, தேனாம்பாறை–கைதகம் சாலை, ஆற்றூர்–மூவாற்றுமுகம் சாலை, மேக்காமண்டபம்–வெள்ளியோடு சாலை, ரவிபுதூர் கடை–கல்லுப்பாலம் சாலை ஆகியவை ரூ. 1.67 கோடி மதிப்பில் செப்பனிடப்பட்டுள்ளன.
அடுத்தகட்டமாக பொன்மனை அருகேயுள்ள பெருவழிக்கடவு பகுதியில் பாலம் கட்ட ரூ. 10 லட்சமும், மேக்கோடு–குலசேகரம் சாலையில் வடிகால் கட்ட ரூ. 90 லட்சமும், கல்லடிமாமூடு–அண்டூர் சாலை செப்பனிட ரூ. 9 லட்சமும், பொன்மனை–பொன்னுமங்கலம் சாலையைச் செப்பனிட ரூ. 10 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் முடிக்கப்பட்டுள்ளது. இச் சாலைப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றார் அவர்.