தினகரன் 12.08.2010
ஆண்டுக்கு ரூ.12 கோடி வசூல் சிறப்பு நிலை நகராட்சியாக மறைமலை நகர் தரம் உயர்வு
செங்கல்பட்டு, ஆக.12: ஆண்டுக்கு ரூரீ12 கோடிக்கு வசூல் ஆனதால், 3ம் நிலை நகராட்சியாக இருந்த மறைமலை நகர் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மறைமலை நகர் 1985ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தப் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவானது. நகரம் வேகமாக வளர்ந்ததால், 1994ம் ஆண்டு காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சில ஊராட்சிகளை பிரித்து, 21 வார்டுகள் கொண்ட மறைமலை நகர் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, கோடிக்கணக்கில் வரி வசூல் ஆனதாலும், 50,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளதாலும் 2004ம் ஆண்டு 3ம் நிலை நகராட்சியாக மறைமலைநகர் தரம் உயர்த்தப்பட்டது.
நகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாலும், ஆண்டுக்கு ரீ12 கோடிக்கு மேல் வரி வசூல், ரீ9 கோடிக்கு மேல் கிராண்ட் வசூல் கிடைக்கிறது. இதனால், மறைமலைநகர் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த, நகரமன்றம் கோரிக்கை விடுத்தது. மறைமலை நகரை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி நேற்றுமுன்தினம் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி தலைவர் சசிகலா கூறுகையில், ‘எங்களது கோரிக்கை ஏற்றுக்கொண்ட முதல்வர், துணை முதல்வர், நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் மற்றும் மண்டல இயக்குநர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம். இப்போது நகராட்சி பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்’ என்றார்.
3ம் நிலை நகராட்சியாக இருக்கும் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்ததில் 92 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், 450 ஊழியர்கள் வரை நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு, 11 மாதங்களாக நிரந்தர ஆணையர் இல்லை. இனிமேல், ஆணையர் நியமிக்கப்படுவார். இதனால், நகராட்சி பகுதியில் துப்புரவு உட்பட பல்வேறு பணிகள் சிறப்பாக நடக்கும் என்று அலுவலர்கள் கூறினர்.