தினமலர் 26.08.2010
முக்கூடல் டவுன் பஞ்.,12வது வார்டு உறுப்பினரை நீக்கியது செல்லும் : கோர்ட் தீர்ப்பு
முக்கூடல் : முக்கூடல் டவுன் பஞ்., 12வது வார்டு உறுப்பினரை நீக்கியது செல்லும் என்று கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முக்கூடல் டவுன் பஞ்., 12வது வார்டு உறுப்பினராக இருந்தவர் இந்துமதி. இவர் கடந்த 2007ம் ஆண்டு பிப்.26, மார்ச் 27, ஏப்.30 ஆகிய தேதிகளில் நடந்த டவுன் பஞ்., கவுன்சில் கூட்டத்திற்கு தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து மூன்று கூட்டங்களில் ஒரு கவுன்சிலர் கலந்து கொள்ளவில்லையெனில் பஞ்., சட்டப்படி உறுப்பினர் பதவிநீக்கம் செய்ய அதிகாரம் உண்டு.
இதன்படி உறுப்பினர் இந்துமதியை டவுன் பஞ்., நிர்வாகம் கவுன்சில் தீர்மானத்தின்படி பதவிநீக்கம் செய்தது. இதை எதிர்த்து இந்துமதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து மூன்று கூட்டங்களில் இந்துமதி கலந்து கொள்ளாததால் கவுன்சில் தீர்மானத்தின்படி இவரை பதவிநீக்கம் செய்தது சரியே என்றும், இவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே காலியாக உள்ள 12வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று டவுன் பஞ்., நிர்வாகம் தெரிவித்துள்ளது.