தினமலர் 30.11.2010
நல்லூரில் ரூ.12 கோடியில் வளர்ச்சி பணி
திருப்பூர்: சுகாதாரத்துறையில் பணிபுரியும் 58 சுகாதார பணியாளர்களை நிரந்தரம் செய்ய, நல்லூர் நகராட்சி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. நல்லூர் நகராட்சியில் கடந்த 2006-07ம் ஆண்டில் தார் ரோடு, வடிகால் பணி என ரூ.2.11 கோடி மதிப்பில் வளர்ச்சி பணி செய்யப்பட்டது. எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, பகுதி இரண்டு திட்டத்தின் கீழ் இப்பணிகள் நடந்தன. கடந்த 2007-08ம் ஆண்டில், மயான மேம்பாடு, தார் ரோடு, திடக்கழிவு மேலாண்மை, வடிகால் பணி, இதர பணிகள் என ரூ.37.89 லட்சத்தில் பணி நடந்தது. பகுதி இரண்டு திட்டம், 12வது நிதிக்குழு மானியம், இரண்டாவது மாநில நிதிக்குழு தேர்தல் மானியம், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பணிகள் நடந்தன. கடந்த 2008-09ம் ஆண்டு தார் ரோடு, குட்டை அபிவிருத்தி, வடிகால் பணி, கூடுதல் வகுப்பறை, நியாய விலை கட்டடம், கூடுதல் வகுப்பறை, தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. பகுதி இரண்டு திட்டம், கேளிக்கை வரி ஈடு செய்தல் நிதி, 12வது நிதிக்குழு மானியம், எம்.எல்.ஏ., தொகுதி, எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.1.29 கோடி மதிப்புள்ள வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன.
2009-10ம் ஆண்டில் பகுதி இரண்டு திட்டம், 12வது நிதிக்குழு மானியம், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., நிதி மூலம் வளர்ச்சி பணி நடந்தது. தார் ரோடு, வடிகால் பணி, திடக்கழிவு மேலாண்மை, நியாய விலை கட்டடம் என ரூ.51.80 லட்சம் மதிப்பில் செய்யப்பட்டது. நடப்பு 2010-11ம் ஆண்டில் எம்.எல்.ஏ., நிதியில், 9.75 லட்சத்தில் பள்ளி கட்டடம்; 13.20 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ், நான்கு கோடியில் தார் ரோடு அமைக்கப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் 68 வளர்ச்சி பணிகள், ரூ.8.55 கோடி மதிப்பில் செய்யப்பட்டுள்ளன. நகராட்சி தலைவி விஜயலட்சுமி கூறுகையில்,””நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கூடுதலாக குடிநீர் பெறுவதற்காக, அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதல் குடிநீர் கிடைத்ததும், வாரம் ஒரு முறை சப்ளை செய்யப்படும்; புதிதாக 4,000 இணைப்புகள் வழங்கப்படும். சந்திராபுரம் குட்டைக்கு நிரந்தர தீர்வுக்கு வழி ஏற்படுத்தப்பட உள்ளது. சுகாதாரத்துறையில் பணிபுரியும் 58 சுய உதவிக்குழுவினரை நிரந்தரம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ராஜ்யசபா எம்.பி., நிதி, நல்லூர் நகராட்சிக்கு கிடைத்தது. விஜயாபுரம் ஒத்தக்கடை முதல் சிட்கோ வரை தார்ரோடு அமைக்க, மத்திய அமைச்சர் வாசன் மூலம் ஐந்து லட்ச ரூபாய் பெறப்பட்டது. பள்ளி கட்டடம், மேல்நிலைத்தொட்டி கட்ட 15 லட்ச ரூபாய் கேட்கப்பட்டுள்ளது,” என்றார்.