12 இடங்களில் புதிய நூலகங்கள் திறக்க நடவடிக்கை
ஈரோடு மாநகராட்சியில் 12 இடங்களில் புதிய நூலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, துணைமேயர் கே.சி.பழனிசாமி பேசினார்.
ஈரோடு மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக புத்தக தினவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் பேசியது:
வாசிப்பு பழக்கம் இப்போது குறைந்து வருகிறது. இப் பழக்கத்தை சிறுவயதிலேயே ஏற்படுத்த வேண்டும். எனது சொந்த ஊரான சூரியம்பாளையம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நூலகம் இயங்கி வருகிறது. சிறுவயதில் இருந்தே சரித்திர நாவல்களை முழுமையாகப் படித்திருக்கிறேன். பொதுவாழ்வுக்கு வர இதுபோன்ற நூல்கள்தான் அடித்தளமாக இருந்தன.
மாநகராட்சிப் பகுதியில் 10 நூலகங்கள் திறக்க உதவ வேண்டும் என்று மாவட்ட நூலக அலுவலர் கோரிக்கை விடுத்தார். 12 இடங்களில் நூலகங்களைத் திறக்க மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் நூலகங்கள் பற்றி தகவல் தெரிவித்தால் பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. இராமலிங்கம் கவனத்துக்கு கொண்டு சென்று, சொந்தக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக, உலக புத்தக தினவிழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு புத்தகக் கண்காட்சியை துணைமேயர் கே.சி.பழனிசாமி தொடங்கி வைத்தார். மாவட்ட நூலக அலுவலர் (பொ) இரா.கோகிலவாணி, மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் முனைவர் ப.கமலக்கண்ணன், சிகரம் சிற்றிதழ் ஆசிரியர் சந்திரா மனோகரன், ஈரோடு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர்.பழனிசாமி, 36-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சி.வெங்கடாசலம், முத்தம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட மைய நூலகர் சு.சுவாமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.