தினமலர் 12.08.2013
ரூ.1,200ல் மழை நீர் சேகரிப்பு தொட்டி பேரூராட்சி உதவி இயக்குனர் தகவல்
அன்னூர்:”ரூ. 1,200ல் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டலாம்,’ என, அன்னூரில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் தெரிவித்தார்.
அன்னூர் பேரூராட்சியில் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ., கருப்பசாமி பேரணியை துவக்கி வைத்தார்.
கோவை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருஞானம் பேசுகையில்,””கோவை மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சிகளிலும் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் மழை நீர் சேகரிப்பு அமைக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது.
“”100 சதவீதம் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைக்கும் பேரூராட்சிக்கு விருது வழங்கி அரசு கவுரவிக்க உள்ளது. எளிய முறையில் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க 1,200 ரூபாய் மட்டுமே செலவாகும். மழை நீர் தொட்டி அமைக்கப்பட்ட இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது,” என்றார்.
பேரணியில், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், சசூரி பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர், சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர். மாதிரி வீடு தத்ரூபமாக, மழை நீர் சேகரிப்பு தொட்டியுடன் அமைக்கப்பட்டு ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்டது. கரகாட்ட குழு, பேண்டு வாத்தியம் ஆகியவையும் பங்கேற்றன.
“”பேரூராட்சியில் உள்ள 7,200 வீடுகளில் 2,000 வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளது,” என செயல் அலுவலர் கல்யாண சுந்தரம் தெரிவித்தார்.
ஒன்றிய சேர்மன் கண்ணம்மாள், பேரூராட்சி தலைவர் ராணி, மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.