தினகரன் 25.03.2013
மதுக்கரை பேரூராட்சியில் 124 நாய்களுக்கு கு.க ஆபரேஷன்
கோவை, :மதுக்கரையில் 124 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டது.
மதுக்கரை பேரூராட்சியில் தெரு நாய் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார் பெறப்பட்டது. இதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் சண்முகராஜா, செயல் அலுவலர் கணேஷ்ராம், சுகாதார அலுவலர் திருவாசகம் உத்தரவின் பேரில் தெரு நாய்களை பிடிக்கும் பணி துவங்கியது. கடந்த 2 மாதத்தில், மதுக்கரை மார்க்கெட், காந்திநகர், மலைச்சாமி கோயில் வீதி, சர்ச் காலனி, மரப்பாலம், குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதியில் 124 நாய்கள் பிடிக்கப்பட்டன.
இந்த நாய்களுக்கு மதுக்கரை மார்க்கெட்டில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை மருத்துவமனையில் குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் நடத்தப்பட்டது. நடப்பாண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் செய்து தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செயல் அலுவலர் கணேஷ்ராம் கூறுகையில், ‘’ நாய் வளர்ப்பவர்கள், தங்கள் வீட்டு வளாகத்தில் பாதுகாப்பான முறையில் வளர்க்கவேண்டும். நாய்களுக்கு ரேபீஸ் நோய் பாதிப்புள்ளதா என கண்டறியவேண்டும். வீட்டு நாய்களுக்கு உரிமம் பெறவேண்டும். உரிமம் பெறாமல் ரோட்டில் திரியும் நாய்கள் தெரு நாய்களாக கருதப்படும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை தெரு நாய்களுடன் விளையாட விடக்கூடாது, ’’என்றார்.