தினமலர் 26.05.2010
ரூ. 12.44 லட்சம் பணிகள் ரத்து: ஐந்து முறை டெண்டர் விட்டும் பயனில்லை
அன்னூர் : அன்னூர் பேரூராட்சியில் ஐந்து முறை டெண்டர் விட்டும் பணிகளை எடுத்து செய்ய ஒப்பந்ததாரர்கள் முன்வராததால் ரூ. 12.44 லட்சத்திற்கான பணிகள் ரத்து செய்யப்பட்டன. அன்னூர் பேரூராட்சி மன்ற கூட்டம் துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 32 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுத்து, உரம் தயாரிக்க பேரூராட்சியில் இடம் இல்லை. ஏற்கனவே உரம் தயாரித்து வந்த மயானம் பகுதிக்கு பொதுப்பணித்துறை ஆட்சேபணை தெரிவித்துள்ளது. எனவே தனியாரிடமிருந்து இரண்டு ஏக்கர் நிலம் வாங்குவது குறித்த தீர்மானத்துக்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. பொதுநிதியில் ரூ. 12 லட்சத்து 44 ஆயிரத்தில் வார்டு எண் 2,5,6,7,9,10,12 ஆகியவற்றில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு மற்றும் சாக்கடை வடிகால் கட்டும் 10 பணிகளுக்கு கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் ஐந்து முறை டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்ததாரர்கள் யாரும் பணியை எடுக்க முன்வரவில்லை.
இப்பணிகளை ரத்து செய் யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சத்திரோடு முதல் ஓதிமலை ரோடு வரை ரூ. 5.60 லட்சத்தில் தார்ரோடு, உப்புத் தோட்டத்தில் ரூ. 2.80 லட்சத்தில் சாக்கடை வடிகால், கட்டபொம்மன் நகரில் ரூ. 2.75 லட்சத்தில் சிறுபாலம், 14வது வார்டில் ரூ. 1.90 லட்சத்தில் கான்கிரீட் தளம், அன்னூர் ஐ.டி.ஐ., வீதியில் ரூ.1.45 லட்சத்தில் தார் சாலை, தர்மர் கோவில் வீதியில் ரூ.1.15 லட்சத்தில் தார்சாலை, மின்வாரிய அலுவலக ரோட்டில் ரூ. 1.05 லட்சத்தில் தார் ரோடு, நாகம்மா புதூரில் ரூ. 4.80 லட்சத்தில் வடிகால், குன்னத்தூராம்பாளையத்தில் ரூ. 5.47 லட்சத்தில் வடிகால் மற்றும் தார் சாலை, மாரியப்ப முதலியார் காலனியில் ரூ. 2.25 லட்சத்தில் கான்கிரீட் தளம் என 29.70 லட்சம் ரூபாயில் பணிகள் செய்ய டெண் டர்கள் அங்கீகரிக்கப் பட்டது. நவீன எரிவாயு தகன மேடை அமைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் கமருதீன், விஸ்வநாதன், கனகராஜ், ரங்கநாதன், இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.