தினமலர் 04.01.2014
புதிய வரலாற்று சின்னம்!இந்திய – பிரிட்டன் பாணியில்… ரூ. 12.65 கோடியில் மாமன்ற அரங்கம்
கோவை :கோவை மாநகராட்சியில், 12.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய மாமன்ற அரங்கம் கட்டப்பட உள்ளது. இந்திய – பிரிட்டன் கட்டடக் கலை பாணியில், இதன் முகப்பு தோற்றம் அமைகிறது; கோவையின் வரலாற்று சின்னமாக, இதை உருவாக்க வேண்டும் என்பதில், மாநகராட்சி நிர்வாகம் உறுதியாக உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1886ல், கோவை நகராட்சி 10.88 சதுர கி.மீ., பரப்பில் தோற்றுவிக்கப்பட்டது. கோவை நகராட்சி பகுதிகளின் வளர்ச்சியால், அருகில் இருந்து உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு, 105.46 சதுர கி.மீ., பரப்பில், 1981ல் மாநகராட்சியாக தகுதி உயர்வு பெற்றது.
கடந்த 2011ல், 11 உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதனால், மாநகராட்சியின் பரப்பு 257.04 சதுர கி.மீ.,யாக விரிவடைந்தது. வார்டுகளின் எண்ணிக்கை 72ல் இருந்து, 100 ஆக உயர்ந்தது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில், 1892ல் கட்டப்பட்ட விக்டோரியா அரங்கம் தற்போது மாமன்ற கூட்ட அரங்கமாக பயன்படுத்தப்படுகிறது. மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்ட நிலையில், மாமன்ற கூட்டம் நடக்கும் போது, கவுன்சிலர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமர்வதற்கு விக்டோரியா அரங்கத்தில் போதுமான இடவசதியில்லை. இதனால், புதிய மாமன்ற கூட்ட அரங்கம் கட்டுவதற்கு, தற்போதை கவுன்சில் பொறுப்பேற்றதும், முதல் பட்ஜெட்டில் (2012 – 13), நிதி ஒதுக்கப்பட்டது.
மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மாற்று இடத்தில் அனைத்து வசதிகளுடன், புதிய மாமன்ற கூட்ட அரங்கம் 9.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு, நிர்வாக அனுமதி கேட்டு, கடந்த ஆண்டு ஜூலையில் நகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், புதிய மாமன்ற அரங்கம் கட்ட, 12.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிதியில், புதிய மாமன்ற அரங்கம் கட்டுவதற்கு, கட்டட வரைபட அனுமதி நகரமைப்பு துறையில் பெறுவதற்கும், அரசிடம் நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெறவும் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய மாமன்ற கூட்ட அரங்க மதிப்பீடு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளதால், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் முகப்பு தோற்றம் இந்திய – பிரிட்டன் கட்டடக் கலை பாணியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்த புதிய அரங்கின் வலது, இடது பக்கம் இடம் ஒதுக்கப்படுகிறது. ஆங்கிலேயர் கட்டிய விக்டோரிய அரங்கம், கோவையின் வரலாற்று சின்னமாக உள்ளது. புதிய மாமன்ற கூட்ட அரங்கம், கோவையின் மற்றுமொரு வரலாற்று சின்னமாக உருவாக்க வேண்டும் என்பதில், மாநகராட்சி நிர்வாகம் உறுதியாக உள்ளது.
அரங்கம் எப்படியிருக்கும்
மாநகராட்சி பிரதான அலுவலகத்தின் பின்பகுதியில், 1.20 ஏக்கர் நிலத்தில், 33,666 சதுரடியில், இரண்டு அடுக்கில் புதிய மாமன்ற அரங்கம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
- தரைதளத்தில், மேயர், கமிஷனர், துணை மேயர் அமரும் இடம் மேடை போன்று உயர்ந்திருக்கும். மேயருக்கு வலது, இடது பக்கம் அதிகாரிகள், எம்.எல்.ஏ., -எம்.பி., என, 42 பேர் அமரும் வகையில் உயரம் குறைவாக மேடை அமைக்கப்படுகிறது.
- தரை தளத்தில், 147 கவுன்சிலர்கள் அமரும் அளவுக்கு இருக்கைகள் போடப்படுகின்றன. மேயர், கமிஷனர், துணை மேயர், எம்.எல்.ஏ., – எம்.பி., ஆகியோருக்கு என, மொத்தம் 10 அறைகள் அமைக்கப்படுகின்றன.
- தரைதளத்தில் இருந்து 26 அடி உயரத்தில் முதல் தளம் அமைக்கப்படுகிறது. முதல் தளத்தில், 140 பேர் அமரும் வகையில் கான்பரன்ஸ் ஹால், மண்டல, நிலைக்குழு தலைவர்களுக்கு அறைகள், உணவகம் அமைகிறது.
- தரைதளத்துக்கும், முதல் தளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் பத்திரிகையாளர்கள் 50 பேர், பார்வையாளர்கள் 50 பேர் அமரும் வகையிலும் தனித்தனியாக இருக்கை வசதியுடன் மாடம் அமைக்கப்படுகிறது.
- இரண்டு தளங்களில் அமைக்கப்படும் அனைத்து அறைகளிலும் கழிப்பிடம் இணைத்து கட்டப்படுகிறது. ஒவ்வொரு தளத்திலும் ஆண், பெண்களுக்கு பொதுக்கழிப்பிடம் அமைகிறது.
- அரங்கின் உள்பகுதி அரைவட்ட வடிவத்தில் இருக்கும். தேக்கு மரத்தில் உள் அலங்காரம் செய்யப்படுகிறது.
- ஒலி எதிரொலிக்காத வகையில், சவுண்ட் சிஸ்டம், கண்காணிப்பு @கமரா, லிப்ட் அமைக்கப்படுகிறது. மின்பயன்பாட்டை குறைக்கும் வகையில்,சோலார் மின் உற்பத்தி திட்டமும் அமைக்கப்படுகிறது.